வேளச்சேரி செயின்ட் தாமஸ் மவுண்ட் இணைக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிய உள்ள நிலையில் ஆதம்பாக்கம் அருகே, பறக்கும் ரயில் பாலம் சரிந்து விழுந்தது. நல்லவேளையாக யாரும் அந்த வழியாக பயணிக்காததால் பெரியளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையில் பீச் ஸ்டேஷன் முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது. இந்த சேவையை நீட்டிக்கும் வகையில் தற்போது வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பறக்கும் ரயில் திட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் இருந்து 500 மீட்டர் தூரம் இணைக்கும் கட்டுமான பணிகள் நில பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, கடந்த ஒராண்டாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில் பறக்கும் ரயில் தூண்கள் இடையே பாலம் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது இரு தூண்களுக்கு இடையே 40 மீட்டர் நீளம் 120 அடி கொண்ட படுக்கை போன்ற பாலத்தை இணைக்கும் இடையே பொருத்தும் பணி நடந்தது. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஒரு புறத்தில் தூணில் வைக்கப்பட்ட பாலம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த பகுதியில் ரயில்வே பணிக்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்ததால் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த விபத்தின்போது பெரும் சத்ததுடன் நில நடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்துக்கு பிறகு அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் ஆய்வு செய்தனர்.
தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பேட்டி:
விபத்து குறித்து விசாரணைக்கு பிறகு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறினார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தூண்களுக்கு இடையே பாலம் இணைக்கும் போது ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும் போது கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்ததில் விபத்து நிகழ்ந்துள்ளது.
எந்த ஒரு உயிர்சேதமும் இல்லை. பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இந்த விபத்தின் மூலம் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த பால சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி:
தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டியில், “கடந்த 2007ம் ஆண்டு சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பறக்கும் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பீச் ஸ்டேஷன் முதல் பரங்கிமலை வரை இந்த ரயில் சேவை நீடிக்கப்படும் என கூறி ரூ.430 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இந்த ரயில் சேவை அப்போதே 5 கிலோ மீட்டரில் 4.5 கிலோ மீட்டர் வரை 2011ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
மீதமுள்ள பகுதியில் நில உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்ற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருந்தது.
இந்த சூழ்நிலையில்தான் 500 டன் பீம் பொருத்தும் போது கீழே விழுந்து விட்டது. 2 மாதங்களுக்கு பின் ஜுன் மாதம் பணி முடிக்கப்படும். துறை சார்ந்த அதிகாரிகள் விசாரித்து, ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்புடன் பணிகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாதது மகிழ்ச்சி” என தெரிவித்தார்.