செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் அன்னதானத்தைச் சாப்பிடச்சென்ற தன்னை, முதல் பந்தியில் அமரக் கூடாது என்று கூறி கோயிலில் சிலர் தடுத்து, திருப்பி அனுப்பியதாக நரிக்குறவப் பெண் ஒருவர் குற்றச்சாட்டுத் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மேற்கண்ட கோயிலில் இன்று கும்பாபிஷேகப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவப் பெண் உட்படப் பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதானத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டார்.
இதையடுத்து, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் முதல் பந்தியில் அன்னதானம் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனவே, அந்தப் பெண் உட்பட அனைவருடனும் கோயில் வளாகத்தில் அமர்ந்து உணவருந்தினேன். ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, முதற்கட்டமாக ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 21-ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது. வருவாய் இல்லாத கோயில்களை, நிதி ஆதாரம் உள்ள கோயில்களுடன் உபகோயில்களாக இணைக்க முயற்சித்து வருகிறோம். இதன்மூலம், அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு சுவாமி தரிசனம், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பின்னர், நரிக்குறவ மக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கோயில் வளாகத்தில் அமைச்சர் வேட்டி, சேலை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமன், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் பாலசுப்ரமணி, எம்எல்ஏ பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக நரிக்குறவர் இன பெண்கள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜிக்கு மணி அணிவித்து கௌரவித்தன