காரைக்கால் பா.ம.க. மாவட்ட செயலாளர் கொலையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைதாகினர். கொலைசெய்தது ஏன்? என்பது குறித்து முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி (வயது 53). மாவட்ட பா.ம.க. செயலாளரான இவர், திருநள்ளாறு மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் கட்சி அலுவலகம் இருந்தது.



இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற அவரை, ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேவமணிக்கும் அவரது வீட்டுக்கு எதிரே உள்ள இடம் தொடர்பாக மணிமாறன் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் கூலிப்படையை ஏவி தேவமணியை, மணிமாறன் கொலை செய்தது. தெரியவந்தது.


இந்தநிலையில், கொலை நடந்த மறுநாள் முக்கிய குற்றவாளியான மணிமாறனை (28) போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்களான திருநள்ளாறு அரங்கநாதர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி (59), மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, இலுப்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54), மயிலாடுதுறை கூட்டுறவு நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த அருண் (31) மற்றும் சார்லஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.



மேலும் இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த மயிலாடுதுறை மேல மருதாந்த தன்னலூரை சேர்ந்த சார்லஸ் என்ற சரண்ராஜ் (37), கழுகநிமுட்டத்தை சேர்ந்த பாரதி என்ற அம்மாயி (25), செல்லூரை சேர்ந்த ராஜேஸ்குமார் என்ற கொத்தப்பு (33) ஆகிய 3 பேரை திருநள்ளாறு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.




கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:


பிரச்சினைக்குரிய நிலத்தை விட்டுத்தருமாறு தேவமணியிடம் பலமுறை வலியுறுத்தினேன். அவர் விட்டு தருவதாக தெரியவில்லை. மேலும் தேவமணி என்னை கொலை செய்து விடுவாரோ? என்ற அச்சம் ஏற்பட்டது. அவர் முந்துவதற்குள் நான் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதற்காக தனது நண்பர்கள் கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் ஆகியோர் உதவியை நாடினேன். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி கூலிப்படையை ஏவி தேவமணியை தீர்த்து கட்டினேன் என கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர