”யாரையும் கோயிலில் இருந்து வெளியேற்றும் எண்ணமில்லை என்றும், முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “திருக்கோயில்களில் பல ஆண்டுகளாக பூஜைகளில் ஈடுபட்டு உள்ள அர்ச்சகர்களுக்கு பாதிப்பு இல்லாமல் அனைத்து சாதியினர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில்களில் ஏற்கெனவே உள்ள பட்டாச்சாரியார்களையோ அர்ச்சகர்களையோ யாரையும் பணியில் இருந்து நீக்கும் திட்டம் இல்லை. வயது மூப்பிற்கு பின்பும் கோயில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கெனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், 58 அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். கோயில்களில் யாரும் பணியை இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை. மிரட்டலுக்கு பணியும் அரசு அல்ல திமுக அரசு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்துக்கு பாடுபட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது தவறென்றால், அந்த தவறை முதல்வர் ஸ்டாலினும் செய்வார் ” என்று கூறினார்.
முன்னதாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,சாந்தலிங்க மருதாசல அடிகள்,குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணி நியமன ஆணை பெற்ற 58 பேரில் 24 பேர் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிகளிலும், 34 பேர் தனியார் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும், பணியானை பெற்றவர்களில் பட்டியல் பிரிவில் 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6, பிற்படுத்தப்பட்டோர் 12 மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்தவர் 1. தவிர, பெண் ஓதுவார் ஒருவர் பணியாணை பெற்றுள்ளார்.
பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள சுஹாஞ்சானவிற்கு 27 வயதாகிறது. இவர் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை கோயிலில் ஓதுவாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.