பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணை
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் மங்களபுரம் சந்திரயோகி சமாதி தெரு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு விடுபட்ட 44 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தவெக கொடியை அகற்ற சொன்ன மேயர் பிரியா
நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மொட்டை மாடியில் சில இடங்களில் த.வெ.க கட்சியின் கொடி ஏற்றப்பட்டு அந்த கொடி பிரகாசமாக பறந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பத்திரிகையாளர்கள் அந்த கொடியை வீடியோ எடுத்தனர். இதனை சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் அவருடன் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். மேயர் பார்ப்பதை கண்ட உடன் பிறப்புக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு சென்று அந்த மொட்டை மாடியில் இருந்த தவெக கொடியை அவசர அவசரமாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
தவெக - திமுக விற்கும் இடையே போட்டி என விஜய் கூறியதற்கு , அமைச்சர் சேகர்பாபு பதிலடி
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டட கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு தொடர்ந்து கொளத்தூர் ராஜாஜி நகரில் மூத்த குடிமக்களுக்காக கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு.
அறநிலையத்துறை சார்பில் பழனி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும் திமுக ஆட்சி அமைந்து பத்து கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு முதல்வரின் விடாமுயற்சி காரணமாக 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு 2000 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அவர்களுக்கு அமைந்துள்ளது.
மேலும் பேசிய அவர் ,
கொளத்தூரில் வேறொரு இடத்தில் செயல்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அதில் 800 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாக கூறிய அமைச்சர் , புதிதாக கட்டப்படும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், இரண்டு ஆய்வகங்கள், நூலகங்கள், உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அடுத்தாண்டு கல்லூரி துவங்கும் மாதத்திற்குள் இந்தக் புதிய கல்லூரி செயல்பாட்டிற்கு வரும்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லி மாயமாகி விட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் குறித்த கேள்விக்கு ;
அளிக்கப்பட்ட புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
தவெக - திமுக இடையே தான் போட்டி என்று விஜய் தெரிவித்திருக்கிறார் என்ற கேள்விக்கு ;
அவர் அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கட்டும். ஆக்க பூர்வமான கேள்விகளை கேளுங்கள். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அரசியலை பற்றி பேசுங்கள் மக்கள் பிரதிநிதி கொண்ட கட்சிகளுடைய விமர்சனங்களை பற்றி பேசுங்கள். தேர்தலை சந்தித்த கட்சிகளுடைய விமர்சனங்களை பற்றி பேசுங்கள் எதுவுமே இல்லாமல் போற போக்கில் பேசி இருந்தால் அதற்கெல்லாம் அமைச்சர்கள் பதில் சொல்ல முடியுமா ?
கோவை சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர்.
24 மணி நேரத்தில் குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டு பிடித்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். சட்டத்தின் ஆட்சி இந்த ஆட்சி, இன்னார் இனியவர் இன்று பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைத்திருக்கிறது. மணிப்பூரை போன்று கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆட்சி உறங்கிக் கொள்ளவில்லை.
திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது தொடர்பான கேள்விக்கு ;
இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்ற பழமொழி உள்ளது எந்த விஷயங்களும் கையில் கிடைக்காதவர்கள் இது போன்ற பிரச்சனைகளை எடுத்து ஆடுவது தேர்தலை மையப்படுத்தி நடத்தும் போராட்டமே தவிர உண்மையாக நடக்கும் போராட்டம் இல்லை என்று அவர்களுக்கே தெரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசியலுக்காக போடுகின்ற வேடம் என கூறினார்.