தீக்காய பிரிவு - ரூ.8.80 கோடி மதிப்பில் அதிநவீன உபகரணங்கள்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தீக்காய பிரிவிற்கான ரூ.8.80 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்:
தீக்காய பிரிவு மையமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய கீழ்பாக்கம் தீக்காயப் பிரிவில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் கூட தீக்காய பாதிப்புகளுக்குள்ளானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அந்த வகையில் சுடர் தீக்காயங்கள் மின் தீக்காயங்கள் அமிலம் தீக்காயங்கள் பட்டாசு தீக்காயங்கள் ரசாயன தீக்காயங்கள் என்று பல்வேறு வகைகளில் தீக்காயங்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்படுவதுண்டு எனவே இத்தகைய பாதிப்புகளுக்குள்ளான தீக்காய நோயாளிகள் இந்த மருத்துவமனையில் புற நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கு தீக்காய பிரிவில் சிகிச்சை பெறுகிற நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தீக்காயங்களினால் பாதிக்கப்படுகிற தோலை அவர்களுடைய உடலில் இருந்தே தோல் எடுத்து வைப்பது கடினம். எனவே உடல் உறுப்பு தானத்தின் ஒரு பகுதியாக தோல் தானமும் பெறப்பட்டு அது இங்கே இருப்பில் வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்கின் பேங்க் ஒன்று இங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு உள்ள தீக்காய மையத்தை மேலும் வலுப்படுத்துகிற வகையில் அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கி தரப்படும் என்ற நிதிநிலை அறிக்கையின் படி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய பிரிவுக்கு எட்டு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு தீக்காய பிரிவு உபகரணங்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ஆதாரத்துடன் வாங்கப்பட்டு இன்றைக்கு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான அதிக அழுத்த பிராணவாயு சிகிச்சை கருவி, 62 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் சீர் ஒலி சிகிச்சை என்கின்ற அதே நவீன தொழில்நுட்ப கல்வி, 4 கோடியே 35 லட்சத்தில் அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கி கருவி 3.12 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் தோல் எடுக்கும் கருவி 2.30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் வலை இடைவெளி கருவி என ஏழு வகையான கருவிகள் இங்கே பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தென்கத்திற்கு புகழ் சேர்க்கிற வகையில் மருத்துவ சேவை
வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ தேவையை நிறைவேற்றுகிற வகையில் பல்வேறு புதிய புதிய திட்டங்கள் எல்லாம் இந்த மருத்துவமனை கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு கோடியே 36 லட்சத்தில் ஒரு இடைநிலை பராமரிப்பு மையம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது, 2 கோடியே 30 லட்சத்தில் அதிர்வலை மையம் புற்றுநோய் சிகிச்சைகளுக்குரிய அதிநவீன கருவிகள் இங்கே தொடங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் 358 கோடியே 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ஆதாரத்துடன் ஆறு தளங்களைக் கொண்ட 2, 68,815 சதுர அடி பரப்பில் 441 படுக்கைகள், 12 அறுவை அரங்கங்கள், ஒரு கூட்டு அறுவை அரங்கம் போன்றவைகளுடன் கூடிய ஒரு டவர் பிளாக் கட்டிடம் ஒன்று கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.
அதற்கான உபகரணங்கள் டி.என்.எம்.எஸ் சி சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு அங்கே
வைத்த பின்னர் அந்த கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை பொருத்தவரை பிளாஸ்டிக் சர்ஜரி ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் தீக்காய அறுவை சிகிச்சைகள் என்று தென்னகத்திற்கு புகழ் சேர்க்கிற வகையிலான மருத்துவ சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்றைக்கு இந்த 8 கோடி 80 லட்சம் மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இந்த மருத்துவமனையில் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் கராராக 3.5 லட்சம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழகத்தை பொறுத்தவரை ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் 4 பேர் கொண்ட கட்டண நிர்ணய குழு உள்ளது. இந்த கட்டண நிர்ணய குழு தான் ஆண்டுதோறும் மருத்துவ கல்வி மாணவர்களின் டியூஷன் பீஸ் ஸ்பெஷல் பீஸ் லைப்ரரி பீஸ் இந்த மூன்று வகையான கட்டணங்களையும் நிர்ணகிறது.
இந்த ஆண்டு கூட தனியார் கல்லூரிகளை சேர்ந்த அந்த கூட்டமைப்பு இந்த குழுவிடம் கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என்கின்ற கோரிக்கை வைத்தார்கள் ஆனால் நீதியரசர் தலைமையிலான இந்த கட்டண நிர்ணய குழு இந்த ஆண்டு உயர்த்த முடியாது ஏற்கனவே இருக்கிற கட்டணம் போதுமானது என்று அதை மறுத்துவிட்டார்கள்.
இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரை ஹாஸ்டல் பீஸ் , பஸ் பீஸ் இரண்டுமே அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வோரிடம் ரூபாய் மூன்று புள்ளி ஐந்து லட்சம் கணக்கில் வராத பணம் வாங்க படுவதாக எழுந்த குற்றசாட்டுக்கு சம்பந்தப்பட்ட கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயம் இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு எந்த கல்லூரி நிர்வாகம் ஆவது கராராக வசூல் என்கின்ற வகையில் செய்திருப்பார்களே ஆனால் இந்த கமிட்டிக்கு புகார் அளித்தால் அல்லது அரசுக்கு தெரிவித்தால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி மருத்துவ இளங்கலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி பாரா மெடிக்கல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது.நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.