போராட்டத்திற்கு சென்ற ஊழியர்களை காஞ்சிபுரம் போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் - Samsung Employee Strike
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரித்தது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900க்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குழு அமைத்து பேச்சுவார்த்தை
போராட்டத்தை கைவிட வேண்டும் என ஐந்திற்கும் மேற்பட்ட முறை பல்வேறு கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தோல்வியில் முடிந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு குறு தொழில்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமை குழு அமைத்தது.
தொடர்ந்து நடைபெறும் போராட்டம்
தொழிலாளர்களின் முக்கிய 14 கோரிக்கைகள் நிறைவேற்ற சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என கூறி தொடர்ந்து சி.ஐ.டி.யு தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு சங்கம் தான் முக்கியம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
திடீர் சோதனை செய்த போலீஸ்
நேற்று போராட்டம் நடைபெறும் பகுதியில் சாலையோரம் இருபுறங்களும் காவலர்களை அமர்த்தி இருசக்கர வாகனத்திலும், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து செல்லும் சாம்சங் ஊழியர்கள் உடை அணிந்து வருபவர்களை அடையாள அட்டையை சோதனை செய்த பின் காவலர்கள் அனுமதிக்கப்பட்டு ஊழியர்களைப் போராட்டத்திற்கு அனுமதித்தனர்.
தனியார் பேருந்தில் செல்லும் சாம்சங் ஊழியர்களை காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக அடையாள அட்டையை காண்பிக்க செய்து ஊழியர்களுக்கும் பொதுமக்களும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் சாம்சங் நிர்வாக உடைய அணிந்திருக்கும் ஊழியர்களின், அடையாள அட்டையை கேட்டு வாங்கி சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சொல்வது என்ன ?
இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில், காவல்துறையிடம் விளக்கத்தை பெற முயற்சித்தோம். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்ததாவது: சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போா்வையில் உள்நுழைந்து அவா்கள் வன்முறை போராட்டமாகவும், அரசுக்கு எதிரான போராட்டமாகவும் திசை திருப்ப முயலுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உண்மையான சாம்சங் கம்பெனி தொழிலாளா்களை போலீசாா் தடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.