மிக்‌ஜாம் புயல் மிரட்டல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இன்று இதுவரையில் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 9 வருகை, புறப்படு விமானங்கள் தாமதம். மேலும் சில விமானங்கள் ரத்து தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.


சென்னை விமான நிலையத்தில் இருந்து, மும்பைக்கு இன்று காலை 9:40 மணிக்கு செல்லும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 4:30 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2  புறப்பாடு விமானங்கள், காலை 8:55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் வருகை விமானம், ஆகிய 3 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், துபாய், சார்ஜா, அந்தமான், மும்பை, ஜோத்பூர், ஹைதராபாத் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள், துபாய், மும்பை ஆகிய 2 வருகை விமானங்கள், மொத்தம் 9 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் பல விமானங்கள் தாமதமாக வாய்ப்பு உண்டு. எனவே விமான பயணிகள் முன்னதாகவே, அவர்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்பாடு, வருகை குறித்து தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்கள் அமைத்துக் கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


Cyclone Michaung  (மிக்ஜாம் புயல்)


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.



இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இன்றும் நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமுதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.