மிக்ஜாம் புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்:
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் நாளை உருவாகியுள்ள நிலையிலும், அது சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளதாலும் சென்னையில் கடந்த சில தினங்களாகவே மழை விடாமல் பெய்து வருகிறது.
மிக்ஜாம் புயல் உருவாகும் என்று அறிவிப்பு வெளியானது முதலே தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த புயல் சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீறும் கடல் அலைகள்:
தற்போது, மிக்ஜாம் புயல் சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.. தீவிர புயலாக 90 கி.மீ. வேகத்தில் நாளை மறுநாள் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று எண்ணூரில் கடல் அலை வழக்கத்திற்கு மாறாக சீறிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் பூங்காக்களுக்கு, கடற்கரைகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அமைச்சர் நேரு அறிவுறுத்தியிருந்த நிலையில், சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு இன்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறை தினம் என்றாலே மெரினா மற்றும் பெசன்ட் நகர்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மழை விட்டு விட்டு பெய்து வருவதாலும் சிலர் கடற்கரைகளுக்கு செல்ல முற்பட்டு வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். மிக்ஜாம் புயல் 11 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்கள் தனியாக கண்காணிக்கப்பட்டு, தண்ணீர் தேங்கினால் வேகமாக அகற்றுவதற்கான முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளது. 16 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள், 400க்கும் மேற்பட்ட மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் முக்கிய சாலைகளில் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில் போக்குவரத்து காவலர்களும் முழு வீச்சில் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.