கலந்தாய்வு மூலம் மட்டுமே இட ஒதுக்கீடு

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்

இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத் தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையார் அருண் , பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், அரசின் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும் , கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான இடத்தினை ஆலோசனை செய்யுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

இளைஞரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் 8 நபர்கள் கைது

சென்னை மாதவரம் பர்மா காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த லோகேஷ் (எ) சந்துரு ( வயது 24 ) என்பவர் 12 ஆம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14.08.2025 அன்று காலை , லோகேஷ் (எ) சந்துரு வீட்டில் இருந்த போது, அவரது நண்பரான ஜெரோம் என்பவர் அழைத்ததின் பேரில், அவருடன் லோகேஷ் (எ) சந்துரு சென்றுள்ளார்.

பின்னர் முன்விரோதம் காரணமாக லோகேஷ் (எ) சந்துருவை ஜெரோம் உட்பட அறிமுகமான சிலர் சேர்ந்து அம்பேத்கர் நகர் சுரானா கம்பெனி காலியிடத்தின் அருகே உள்ள புதரில் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் , லோகேஷ் (எ) சந்துரு ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

8 இளைஞர்கள் கைது 

இச்சம்பவம் குறித்து லோகேஷ் (எ) சந்துருவின் தாயார் கிருஷ்ணவேணி ( வயது 49 ) என்பவர்  M-1 மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை மீட்டு , உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவரம் பகுதியை சேர்ந்த ரூபேஷ் ( வயது 27 ) ,  2.மோனிஷ் (எ) பூவரசன் வயது (24 ) , பிரவீன்குமார் ( வயது 20 ) , ஆகாஷ் வயது ( 19) , ஆகாஷ் ( வயது 19 ) , ஜெரோம் ( வயது 20 ) , கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பிரகான்குமார் ( வயது 19 ) , பொன்னேரி பகுதியை சேர்ந்த  அருண்குமார் ( வயது 37 ) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது கொண்ட 2 இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

கொலை செய்ய காரணம் என்ன ?

அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கத்தி, 3 இருசக்கர வாகனங்கள்,  3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இறந்து போன லோகேஷ் (எ) சந்துருவின் நண்பர்கள் சிலர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு , ரூபேஷின் நண்பர் ஜோயல் ஜோஸ்வா என்பவரை கத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு லோகேஷ் (எ) சந்துரு தான் முக்கிய காரணம் என்று ரூபேஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு லோகேஷ் (எ) சந்துருவை  கொலை செய்துள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரூபேஷ் மீது ஏற்கனவே கஞ்சா , வழிப்பறி, அடிதடி உட்பட 8 குற்ற வழக்குகளும் மோனிஷ் (எ) பூவரசன் மீது கஞ்சா , வழிப்பறி, அடிதடி உட்பட 10 குற்ற வழக்குகளும் , ஆகாஷ் மீது 1 அடிதடி வழக்கும் , ராகேஷ் மீது வழிப்பறி , அடிதடி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் , இவர் M-1 மாதவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். 2 இளஞ்சிறார்கள், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.