79 வது சுதந்திர தினம்
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார். இதைத் தொடர்ந்து கோட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தெற்கு ரயில்வே - சுதந்திர தினம் கொண்டாட்டம்
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் 79 - வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசியக்கொடி ஏற்றி ரயில்வே பாதுகாப்பு படை அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.
நிகழ்ச்சியில் அப்போது பேசிய அவர் ;
கடந்த 2024 - 25 ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வே 12,659 கோடி வருவாய் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் ஜூலை 2025 வரை, 5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 புதிய ரயில்கள் இயக்கம்
பயணியர் மற்றும் ரயில் சேவைகள் அதிகரித்தாலும் 91.2 சதவீதம் நேரக் கட்டுப்பாடு பராமரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 3 புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் 5,150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதல் தேவைக்காக 108 பொதுப் பயணியர் பெட்டிகள் 90 ரயில்களில் சேர்க்கப்பட்டன. நான்கு வந்தே பாரத் ரயில்கள் , 20 மற்றும் 16 பெட்டிகளாக நீட்டிக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் முதல் , சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, முதல் 'ஏசி' மின்சார புறநகர் ரயில் இயக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்படும்
கடந்த மூன்று ஆண்டுகளில் 2,800 கி.மீட்டர் பாதையில் வேகம் 80 முதல் 90 - ல் இருந்து , 100 மற்றும் 110 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. மேலும் 415 கி.மீ. பாதையில் வேகம் 110 - ல் இருந்து 130 கி.மீ ஆக உயர்த்தப்பட்டது. அம்ரித் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களில் 13 நிலையங்கள் மே 22 - ம் தேதி திறக்கப்பட்டன. மேலும் 15 தயாராக உள்ளன. மீதம் டிசம்பர் 2025 - க்குள் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தெற்கு ரயில்வேயில் , 593 நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா இருக்கும் என அவர் பேசினார்.