சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , ஆவின் அலுவலர்களுக்கு உறைகலன் மற்றும் ஆவின் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;
சென்னை மெட்ரோ பகுதிகளில் 30 சதவீத ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 25 கோடி அளவில் விற்பனை நடைபெற்றது. தற்போது 35 கோடியை தொடும் வகையில் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த பால் உற்பத்தியை பெருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 23 பாலகங்கள் உள்ளது. 12 பாகங்களில் 55 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விற்பனையாளர்களை ஊக்கப்படுத்த ஃப்ரீசர்ஸ் பாக்ஸ் ஆவின் பாலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எஞ்சிய பகுதிகளில் உள்ள பாலகங்களில் பணியாளர்களை அதிகப்படுத்த விற்பனையை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய மையங்களாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாகவும் விற்பனை பெருகி வருகிறது.
கடன்கள் முறையாக வழங்கப்படுகிறது
அனைத்து விவசாய மக்களுக்கும் கடன் வாங்குவதற்கான திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும் சென்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. தாட்கோ திட்டத்தில் பட்டியலின சமூகத்திற்கு பல மானியங்கள் உள்ளது. கடந்த காலங்களில் இவர்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது முழு அளவில் அவர்களுக்கு மாவட்டம் வாரியாக கடன்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
பால் பொருட்கள் விநியோகம் - சரி செய்யப்பட்டு வருகிறது
தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்ளை செயினை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200 - க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் அனைத்து ஆவின் பாலகங்களிலும் அனைத்து பால் பொருட்களும் கிடைப்பதில்லை. இந்த சூழல் சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.