சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரயா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டததில் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் நேற்று தாக்கல் செய்தார்.


மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம்


அதில், சென்னையில் 200 வார்டுகளில் ரூ.10 கோடி செலவில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட இடங்களில் ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.


பெண்களுக்கான பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் ஏதும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பெண்களுக்கான EmpowHER உடற்பயிற்சி கூடம் 200 கோட்டங்களிலும் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்ற அறிவிப்புகள் என்ன?


மேலும், 2024-25ஆம் கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் 62 ஆயிரம் பேருக்கு ஒரு ஜோடி காலணி மற்றும் 2 ஜோடி காலுறைகள் வழங்கப்படும்.  9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM (Science, Technology, Engineering, Maths) பயிற்சி வழங்கப்படும். இந்தத் திட்டம் 2021ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது.


இதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று  மேயர் பிரியார் அறிவித்துள்ளார். அதேபோல சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி நிதி வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் 255 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பள்ளிகளின் பாதுகாப்பு கருதி பள்ளி ஒன்றுக்கு தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கு ரூ.7.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


2024- 25ஆம் கல்வியாண்டில் 419 பள்ளிகளில் படிக்கும் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்படும். இதில் மொத்தம் 1,20,175 மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாநகராட்சி வருவாய் ரூ. 4464.6 கோடி


2024-25 நிதியாண்டில் சென்னை மாநகராட்சி வருவாய் ரூ. 4464.6 கோடியாகவும் செலவு ரூ.4727.12 கோடியாக இருக்கும். கடந்த ஆண்டோடு வருவாய் பற்றாக்குறை ரூ.263 கோடியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில், வருவாய் ரூ.4131.7 கோடியாகவும், செலவு ரூ.4508.3 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.377 கோடியாகவும் இருந்தது.


மேலும், இந்த ஆண்டு, சென்னை மாநகராட்சியின் மூலதனக் கணக்கில் ரூ.300 கோடி உபரி நிதி இருக்கும். மூலதனத்தின் மூல வருவாய் ரூ.3455 கோடியாகவும், செலவு ரூ.3140 கோடியாகவும் இருக்கும்  ரூ.315 கோடி உபரியாக இருக்கும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க


TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்..