1000 சவரன் வரதட்சனை:


கடந்த 2011 ஆம் ஆண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்  கே.பி.கந்தன். பின்னர், 2021 ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். இதனிடையே சென்னை பெருநகர மாநகராட்சி 182 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருக்கும் இவரது மகன் கே.பி.கே.சதீஸ் குமாருக்கு வரன் தேடிய போது அம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீ காந்த் என்பவரது மகள் ஸ்ருதி பிரியதர்ஷினியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதுஇந்த திருமணத்தின் போது சுமார் 600 சவரன் தங்கம், வெள்ளி நகைகள், 2 சொகுசு கார்கள் ஆகியவை கே.பி.கந்தன் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலும் 400 சவரன் கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர் முன்னாள் எம்.எல்.ஏ கந்தன் குடும்பத்தினர்.


பரபரப்பு புகார்:


இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், “என் பெயர் ஸ்ரீகாந்த் (58). நான் அம்பத்தூரில் மரக்கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறேன். என் மகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய வேண்டி வரன் பார்க்கும்பொழுது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி. கந்தன் அவருடைய மகன் கே.பி.கே. சதீஷ்குமார் வரன் சம்பந்தமாக என்னிடம் தொடர்பு கொண்டார்கள். இருவீட்டாரும் பேசி சம்மதித்து திருமணம் முடிவானது. கே.பி.கந்தன் மற்றும் அவருடைய மனைவி சந்திரா அவர்கள் சார்பாக நிறைய நபர்கள் வருவார்கள் அதனால் திருமண நிச்சயதார்த்தம் கிண்டியில் உள்ள ITC Chola-வில்நடத்த வேண்டும் என்றும், நிச்சயதார்த்தத்திற்கு மண மகனுக்கு Rado Watch, வைர பிரேஸ்லட், தங்க செயின், வைர மோதிரம் போட வேண்டும் என்றும் திருமணத்திற்கு பெண்ணிற்கு குறைந்த பட்சம் 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளை-க்கு 100 சவரன் தங்க நகைகளும் இரண்டு விலை உயர்ந்த கார்களும் வரதட்சனையாகவும்அதனைத் தொடர்ந்து திருமணம் அடையாரில் உள்ள ராமசந்திர கன்வென்சன் சென்டர்-ல் நடத்த வேண்டும் என்று நிர்பந்தித்தனர். நான் 1000 சவரன் தங்க நகை மட்டும் என்னால் செய்ய முடியாது என்றும், பெண்ணுக்கு 500 சவரனும், மாப்பிள்ளைக்கு 100 சவரனும் வரதட்சனையாக தருகிறேன் என்றும், மற்றவைகள் அவர்கள் வரதட்சனையாக கேட்டப்படி செய்கிறேன் என்று தெரிவித்த பின்பு 26.02.2018 அன்று நிச்சயதார்த்தமும், 25.04.2018-ல் திருமணமும் நடந்தது. கே.பி. கந்தன் வரதட்சனையாக கேட்டப்படி Audi கார் மற்றும் BMW கார் அதன் மதிப்பு 1.65 கோடி மற்றும் தங்க நகை 600 சவரன், வெள்ளி 20 கிலோ ஆகியவைகள் வரதட்சனையாக கொடுக்கப்பட்டு சீர்வரிசையாக கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தேன்என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.


 


கொலை மிரட்டல்:


மேலும் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் காவல் துறையில் அளித்துள்ள அந்த மனுவில், “திருமணம் நடந்த பிறகு சிறிது காலம் மாப்பிள்ளையும், என் மகளும் சந்தோஷமாக தான் இருந்தார்கள். அதன் பிறகு அதே வீட்டில் கணவருடன் வசிக்கும் மாப்பிள்ளையின் சகோதரி இந்துமதி, மாப்பிள்ளையின் அம்மா ஆகியோர்கள் திருமணத்திற்கு வரதட்சனையாக கேட்ட 1000 சவரன் நகையை போடவில்லை என்று என் மகளை வார்த்தையால் கொடுமை படுத்தியுள்ளனர். இவர்களின் கொடுமை தாங்காமல் என் மகள் என்னிடம் பலமுறை நேரில் வரும் பொழுதும் தொலைபேசியின் வாயிலாகவும் தெரியப்படுத்தியுள்ளார். நான் இதை கே.பி. கந்தனுக்கு தெரியப்படுத்தி என் மகளை பார்த்துக் கொள்ளுமாறும், கொடுமை படுத்த வேண்டாம் என்றும் நீங்கள் கேட்ட நகைகளை கொடுத்து விடுகிறேன் என்றும் கூறியிருந்தேன். என் மகளின் ஆடி மாதத்தின்போது மாப்பிள்ளை, அம்மா வற்புறுத்தலின் பேரில் என் மகளுக்கு வைரத்தில் தாலி செயினும், மாப்பிள்ளைக்கு வெள்ளியில் சாப்பிடும் தட்டு, டம்பளர் ஆகியவைகளையும் கொடுத்தேன். என் மகளின் முதல் திருமணம் நாள் அன்று என் மருமகனுக்கு ஒரு பெல்ட் அன்பளிப்பாக கொடுத்தேன். அவர் ஏன் தங்க நகை கொடுக்கவில்லை என்று என் மகளை அடித்து தகராறு செய்தார். அந்த சமயம் என் மகள் 5 மாத கர்பினியாக இருந்தார். இந்நிலையில் என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.


பிறந்தது பெண் குழந்தை என்பதால் என் மகளின் கணவர் வீட்டில் யாருக்கும் சந்தோஷம் இல்லை அதை காரணமாக வைத்து என் மருமகன், அவருடைய அம்மா, தங்கை பலமுறை வார்த்தையால் கொடுமைபடுத்தி என் மகள் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வரும்வரை அவர்கள் கொடுமை படுத்தியுள்ளார்கள்.


இதை தெரிந்து நான் மாப்பிள்ளையின் தந்தை கே.பி.கந்தனிடம் கூறியபோது, அவர் அவரின் வீட்டாரை கண்டிக்காமல் என் மகளை மிரட்டி இங்கு நடப்பதை எல்லாம் ஏன் உன் தந்தையிடம்  சொல்கிறாய் இன்னொரு முறை உன் தந்தை என்னிடம் பஞ்சாயத்திற்கு வந்தால் உன் குடும்பத்தையே அடியோடு ஒழித்து விடுவதாக கூறியதாக என் மகள் என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். இதன் பிறகு மே மாதம் 2021-ல் என் மகளை என் மகளின் கணவர், மாமியார், என் மகள் கணவரின் சகோதரி இந்துமதி ஆகியோர் அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல் எங்கே அழைத்து சென்றால் புகார் ஆகி விடுமோ என்று என் மகளின் கணவரின் சகோதரி இந்துமதி மருத்துவர் என்பதால் அவரே மருத்துவம் பார்த்து மருந்து கொடுத்துள்ளார்.


இந்நிலையில் என் மகளையும், குழந்தையையும் 2021-ம் வருடம் மே மாதம் 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டதன் காரணத்தினால் என் மகள் Cab மூலமாக என் வீட்டிற்கு வந்துவிட்டார். என் மகளை சேர்த்து வைக்க கே.பி.கந்தனிடம் நான் பலமுறை பேசியும் எந்த பலனும் இல்லை. அவர்கள் விவாகரத்து வேண்டி பொய்யான தகவலை சேர்த்து வழக்கு தொடுத்து அது குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என் மகளை வீட்டை விட்டு அவர்கள் அனுப்பும்போது அவருடைய துணி மற்றும் நகைகள், செல்போன் ஆகியவைகளை மாப்பிள்ளையின் வீட்டிலேயே வைத்துவிட்டார்.


இந்நிலையில் என் மாப்பிள்ளை என் மகளின் அலைபேசியை உபயோகித்து அதில் உள்ள இன்ஸ்டாகிராமில் என் மகள் மருத்துவம் படிக்கும்போது அவரின் வகுப்பு தோழருடன் பேசியதை எல்லாம் எடுத்து என் மகளை அவமான படுத்த வேண்டி என் மகள் பிரிந்து இரண்டு வருடம் கழித்து தற்பொழுது இந்த சங்கதிகளை ஒரு மனுவாக நீதிமன்றத்தில் சமர்பித்ததோடு அல்லாமல் என்னுடைய உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி எங்கள் நன் மதிப்பை களங்க படுத்தியுள்ளார்கள். என் மகள் சேர்ந்து வாழவேண்டும் என்பதனால் நான் இது நாள் வரை என் மருமகன் சதீஷ்குமார் என் மருமகனின் தந்தை கே.. கந்தன், தாயார் சந்திரா, சகோதரி இந்துமதி ஆகியோர் மேல் எந்த புகாரும் காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ தெரிவிக்காமல் இருந்தேன்.


தற்பொழுது நான் கே.பி. கந்தனிடம் நேரிடையாக சென்று கேட்ட பொழுது என் பெண்ணிற்கு மேலும் 500 சவரன் நகை தர வேண்டும் என்றும், அவரின் மகனின் வியாபாரத்திற்கு 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், தரவில்லை என்றால் உன் மகள் வாழமுடியாது என்று என்னை மிரட்டி அனுப்பிவிட்டார். என் மகளை வரதட்சனை கொடுமை செய்து வாழவிடாமல் என் வீட்டிற்கு அனுப்பிவிட்ட சதீஷ்குமார், அவரின் தந்தை கே.பி.கந்தன், தாயார் சந்திரா, அவருடைய மகள் இந்துமதி ஆகியோர்கள் மீது வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.