தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்-டாக் முறையில் கட்டணம் வசூல் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் சில சுங்கச்சாவடிகளில் அந்த செயலி சரியாக செயல்படாத காரணத்தால், பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதற்கு பிரச்னைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. இந்நிலையில், சுங்கச்சாவடியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பணம் செலுத்திவிட்டுதான் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தேறியிருக்கிறது.
சுங்கச்சாவடி கட்டண கொள்ளையை எதிர்த்து தமிழ்நாட்டில் அவ்வப்போது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு மக்களவை உறுப்பினருக்கே சுங்கச்சாவடி ஊழியர்களால் அவமதிப்பு நடந்துள்ளது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
யார் அந்த எம்.பி ? என்ன நடந்தது..?
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிர் சுதா. இவர் சென்னை விமான நிலைய டோல் கேட்டில் தனக்கு நடந்த கசப்பான சம்பத்தை குறிப்பிட்டுள்ளார் அதில், “சென்னை விமான நிலையத்தில் இரண்டு முறை எனக்கு மோசமான நிகழ்வுகள் நடந்தன. அங்கிருந்து வெளியே வரும்போது இருக்கும் டோல் கேட்டில் பணம் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். நான் ஒரு எம்.பி. தான் பணம் செலுத்த வேண்டும் என்பது கிடையாது என நான் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய கார் ஓட்டுநர் என்னை அழைக்க விமான நிலையம் உள்ளே வரும்போது, டோல்கேட்டில் பணம் செலுத்தி பில் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். ஆனால், மீண்டும் நான் வெளியே செல்லும்போது பணம் செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்தனர். நான் அதனை மறுத்து அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் என்னை அச்சுறுத்தும் விதமாக என்னுடைய வாகனத்தை சூழ்ந்துக்கொண்டு சத்தம்போட ஆரம்பித்தனர்.
டோல்கேட்டில் கட்டப்பாஞ்சாயத்தா ?
அதுமட்டுமின்றி அங்கிருந்து போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து வந்து என்னை நிர்பந்தம் செய்து கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல் பணத்தை கட்டச் சொல்லினர். ஒரு 60 ரூபாய் கூட பணம் செலுத்த மாட்டங்களா ? அப்பறம் என்ன எம்.பி ? அதற்கு கூட வக்கில்லையா என வார்த்தைகளால் என்னை அவமானப்படுத்தத் தொடங்கினர். நான் உடனே விமான நிலைய CISF போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் அவர்கள் வந்து என்னை சுங்கச்சாவடி ஊழியர்களிடமிருந்து மீட்டனர். இது குறித்து விரிவான புகாரும் நான் அன்று அளித்தேன்” என தெரிவித்துள்ளார்.
மீண்டும் என்னை மடக்கினர் – எம்.பி. ஆதங்கம்
இந்நிலையில், அடுத்த மாதம் எம்.பி சுதா டெல்லியில் இருந்து இரவு விமான மூலம் சென்னை வந்து வெளியே செல்லும்போது மீண்டும் அதே சுங்கச்சாவடி ஊழியர்கள் சுதாவின் வாகனத்தை மறித்து கட்டணம் செலுத்தச் சொல்லி நிர்பந்தம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். இது குறித்து சுதா விமான போக்குவரத்து துறைக்கு அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டு செயல்படும் சுங்கச்சாவடி ஊழியர்கள்
விமான நிலையத்திற்குள் வாகனத்தில் சென்றுவிட்டு 10 நிமிடத்திற்குள் திரும்பிவிட்டால், எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்பது விதி. ஆனால், திட்டமிட்டே போக்குவரத்துக்கு இடையூறு செய்து, அதிக நேரம் விமான நிலையத்திற்கு இருப்பது போன்று டிராஃபிக்கை ஏற்படுத்தி கட்டாய வசூலில் விமான நிலைய சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபடுவதாகவும் சுதா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.