TN Police Encounter: சென்னையில் மட்டுமே கடந்த 3 மாதங்களில் 3 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளன.


தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு நிலை?


தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் பொதுமக்களிடயே அச்சத்த ஏற்படுத்தியது. குறிப்பாக பல அரசியல் கொலைகளும் சீரான இடைவெளியில் தொடர்ந்து அரங்கேறியதால், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதிலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜுலை 5ம் தேதி சென்னையில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தேசிய அளவில் பேசுபொருளானது. ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகையே, தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பேசினார். இதனால், தமிழ்நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மேலும் வலுவடைந்தது.


தூக்கி அடிக்கப்பட்ட அதிகாரிகள்:


இதனை தொடர்ந்து பல ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக உள்துறை செயலாளராக இருந்த அமுதா மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண், ரவுடிகளுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் தான் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள என்கவுன்டர்கள் ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


வெடிக்கும் தோட்டாக்கள் - தொடரும் என்கவுன்டர்கள்



  • அருண் சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, கடந்த ஜுலை 14ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

  • கடந்த செப்டம்பர் 18ம் தேதி சென்னை வியாசர்பாடி பகுதியில் மறைந்திருந்த, ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டார்

  • இன்று (செப்.23) ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான தென்சென்னை ரவுடி சீசிங் ராஜா சுட்டுக் கொல்லப்பட்டார்

  • முன்னதாக, ஜுலை 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.


இதுபோக,



  • கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின், 

  • சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தூத்துக்குடி செல்வம்

  • திருச்சி நடராஜபுரத்தை சேர்ந்த ரவுடி கலைப்புலி ராஜா

  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அகிலன் உள்ளிடோர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்படுள்ளனர்.


காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் நம்பப்படுகிறது.


 எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:’


சட்ட-ஒழுங்கு சீர்கேட்டை செய்துவிட்டு, தற்போது அதனை திசை திருப்பும் நோக்கில் இந்த என்கவுன்டர்கள் நிகழ்த்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. சுட்டுக் கொல்லப்பட்ட அனைவருமே, விசாரணையின்போது தப்பிக்க முயன்றதாலே என்கவுன்டர் நடத்தப்பட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. முக்கிய குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்து செல்லும்போது, கையில் விலங்கிடாதது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கில், இந்த என்கவுன்டர்கள் நிகழ்த்தப்படுவதாகவும் சாடி வருகின்றனர்.