Thiruvallur Train Fire Accident: திருவள்ளூரில் ட்ராக்கில் ஓடிக்கொண்டு இருந்த ரயில் திடீரென பற்றி எரிந்து, பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது.
பற்றி எரியும் ரயில்:
பல ஆயிரம் கோடிகளை கொட்டி ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதாக மத்திய அரசு குறிப்பிட்டு வந்தாலும், அவ்வப்போது ரயில்கள் விபத்தில் சிக்குவது என்பது மட்டும் தொடர்கதையாகவே உள்ளது. அண்மையில் கடலூரில் கூட பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து எற்பட்டு, பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
துறைமுகத்தில் இருந்து எண்ணெயை ஏற்றிக்கொண்டு பயணித்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தடம்புரண்டுள்ளது. இதையடுத்து பற்றி எரிந்த தீ மளமளவென பரவியுள்ளது. தற்போது வரை 5 பெட்டிகளுக்கு தீ பரவி, பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
போராடும் தீயணைப்பு துறையினர்
தகவல் அறிந்ததும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கூறப்படுகிறது. எண்ணெய் என்பதாலும், பலத்த காற்று வீசுவதாலும் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் நிலவுவதாக கூறப்படுகிறது. எண்ணெய் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தீ பரவும் சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், தீ பற்றி எரிவதை வேடிக்கை பார்க்க மக்கள் யாரும் அங்கு கூற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ரயில் பற்றி எரியும் இடத்திற்கு அருகிலேயே குடியிருப்புகளும் உள்ளன். அங்குள்ள மக்கள் ஆபத்தினை உணராமல் தீ கொழுந்து விட்டு எரிவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ரயில் சேவை பாதிப்பு:
ட்ராக்கிலேயே சரக்கு ரயில் எரிவதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் மார்கத்திலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னை நகருக்குள் வரவும், வெளியே செல்லவும் ஏதுவான புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்டவற்றின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புறப்பட்ட ரயில்களும் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.