சென்னையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும், பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த இடமாக சென்னை மெரினா கடற்கரை இருந்து வருகிறது. உலகத்தில் இரண்டாவது மிக நீள கடற்கரையாகவும் மெரினா கடற்கரை இருந்து வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும், மெரினா கடற்கரைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக, வந்து செல்லக்கூடிய இடமாக சென்னை மெரினா கடற்கரை இருந்து வருகிறது.
சென்னையின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த கடற்கரை விளங்குவதால், 2021-22ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டை குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் என்றால் என்ன ?
நீல கொடி (Blue Flag Beach) என்பது சர்வதேச அளவில் கொடுக்கப்படும் அங்கீகாரமாக இருந்து வருகிறது. டென்மார்க்கை சார்ந்த அறக்கட்டளை சார்பில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெற்ற கடற்கரை எப்போதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பான சூழல், கடல் சார்ந்த சூழலை பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் கடற்கரை, நீரின் தரம், சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு, பொதுமக்கள் குளிப்பதற்கான தகுந்த இடம், சுற்றுச்சூழல் மற்றும் குப்பைகள் மேலாண்மை, கடல் நீரில் நீல நிறம் தன்மை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அம்சங்கள் இருக்கும் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெற்றால் அந்த கடற்கரை உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்பது பொருள்படும்.
கோவளம் கடற்கரை
அதன் அடிப்படையில், இந்தியாவில் 10 கடற்கரைகளுக்கு இந்த நீலக் கொடி தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை மற்றும் புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரையும் இந்த நீலக்கொடி தரச்சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீல தரச் சான்றிதழ் பெற்ற கோவளம் கடற்கரைக்கு, தொடர்ந்து, அதிகளவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாறும் மெரினா கடற்கரை
அந்த வகையில் தற்போது சென்னை மெரினா கடற்கரை நீல நிற தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்களின், ஒரு கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் மறு சீரமைக்க முடிவு செய்துள்ளனர். சென்னை கடற்கரையை மறுசீரமைக்க தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பணிகள் தீவிரம்
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்றால், பிறகு வழக்கத்தை விட அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் சென்னை மெரினா கடற்கரை சுற்றுலா வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.