செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மூன்றாம் ஆண்டு சர்வதேச பட்டம் விடும் விழா இன்று தொடங்கியது


தமிழ்நாடு சுற்றுலாத்துறை..


தமிழ்நாடு சுற்றுலாத்துறை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளி மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாமல்லபுரம் பகுதியில் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதால், மாமல்லபுரத்தை மெருகேற்றும் பணியிலும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


அந்த வகையில் மாமல்லபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக வைத்து , பல்வேறு சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளையும் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறது.


செஸ் ஒலிம்பியாட் போட்டி  , அலைச்சறுக்குப் போட்டி , ஆகியவற்றை மாமல்லபுரம் பகுதியை மையமாக வைத்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாமல்லபுரம் அருகே சர்வதேச அளவில் , காத்தாடி திருவிழா நடைபெற்று வருகிறது. 


மாமல்லபுரம் சர்வதேச பட்டம் விடும் விழா 


கடந்த இரண்டு ஆண்டுகளாக மாமல்லபுரம் அருகே, சர்வதேச பட்டம் விடும் விழா விமரிசையாக நடைபெற்ற வருகிறது. முதலாம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவில் 10,000 குறைவான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவில் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, பட்டம் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். 






கடந்த ஆண்டு பட்டம் விடும் திருவிழா பொழுது, மழை பெய்த பொதிலும் சுமார் 20000 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டதால் ,  பட்டம் விடும் திருவிழா வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு பட்டம் திருவிழா குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.


இந்த ஆண்டு திருவிழா...


இந்தாண்டு மாமல்லபுரம் அருகே திருவிடந்தை , கடற்கரையில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கியது.   இன்று  தொடங்கி 18ம்தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இதில் மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து காற்றாடிகளை பறக்க விட உள்ளனர். 




பொதுமக்கள் கோரிக்கை 


கடந்த ஆண்டு இந்த திருவிழா பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 40,000 பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் இதைவிட கூடுதலான பார்வையாளர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.


எனவே கோவளம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை திருவிடந்தை வரை இயக்க வேண்டும் காற்றாடி ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


உலக நாடுகளில் ...


இதுபோன்ற பட்டம் விடும் திருவிழா என்பது உலக நாடு முழுவதும் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவது , பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில ஆண்டுகள் இதேபோன்று தொடர்ந்து பட்டம் விடு திருவிழா நடைபெற்றால், சென்னையின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது திகழவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.