கேரள மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளத போலவே, 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் மாதவிடாய் மற்றும் பேறு கால விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளா அறிவித்திருந்தது. இத்தகைய அறிவிப்பு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளர் மூகாமிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்தியுள்ள கேரள அரசை மநீம பாராட்டுகிறது.
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கேரள அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.
மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கேரளவின் முன்னெடுப்பு:
பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என பல்வேறு முன்னெடுப்புகளுக்கு கேரளா முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளாவில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் (CUSAT) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின்படி, பிஎச்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைய உள்ளனர்.
வருகைப் பதிவேட்டில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், மாதவிடாய் விடுப்புக்கு பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டர் வகுப்புக்கும் 2 சதவீத கூடுதல் விடுப்பு, மாதவிடாய் நாட்களுக்காக ஒதுக்கப்படும்.
தற்போது 75 சதவீத வருகைப் பதிவேட்டைக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே செமஸ்டர் தேர்வை எழுத முடியும். அதைவிடக் குறைவான வருகைப் பதிவேடு கொண்டிருப்பவர்கள் துணை வேந்தருக்குக் கடிதம் எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல அந்த மாணவர்கள், மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் மாதவிடாய் விடுப்புக்கு, மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. மாணவிகள் ஒரு கடிதத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது.
மேலும் வாசிக்க..