குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார்களை ரத்து செய்ய கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவரோ, அவர் சார்பில் மற்றொருவரோ அல்லது குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரியோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளிக்க குடும்ப வன்முறை தடைச் சட்டம் வகை செய்கிறது.
இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்ய முடியாது என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், குடும்ப வன்முறை தடைச் சட்ட நடைமுறைகள் உரிமையியல் நடைமுறைகளாக இருந்தாலும், புகார் மனுக்களை ரத்து செய்யக் கோரும் வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புகார் மனுக்களை ரத்து செய்யக்கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரலாமா என்ற சட்ட கேள்விக்கு விடை காணும் வகையில், இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தனி நீதிபதி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டிக்கா ராமன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த முழு அமர்வு, இன்று சிறப்பு அமர்வாக இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது ஒரு தரப்பில், குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவுகள் உரிமையியல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், இந்த சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை மீறும்பட்சத்தில் அது குற்றமாகிறது என்பதால் இந்த புகார்களை ரத்து செய்யக் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை தான் என விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் சார்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றங்களிலும் நிவாரணம் கோரலாம் எனவும், இந்த சட்ட நடைமுறைகள் முழுவதும் உரிமையியல் நடைமுறை என்பதால், புகார்களை ரத்து செய்யக் கோரி குற்ற விசாரணை முறைச் சட்டம் 482வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என மற்றொரு தரப்பிலும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.