ஜப்பானில் சந்தேகமான முறையில் மரணம் அடைந்த இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பின், தாயிடம் ஒப்படைக்க சேலம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மரியா என்பவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் வேலை கிடைத்ததால் சூசைராஜ், மரியாவையும் அங்கு அழைத்துச் சென்றார். அதற்கு முன் மரியா பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்தார்.
இந்தநிலையில், மரியா ஜூலை 3ஆம் தேதி இறந்து விட்டதாக சூசைராஜ், தனது மாமியார் லூசியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியாவின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலை பெற்று இறுதிச் சடங்கு நடத்த சூசைராஜ் குடும்பத்தினர் முயற்சிப்பதால் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து, தன்னிடம் ஒப்படைக்க கோரி மரியாவின் தாய் லூசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திருமணத்தின் போது 43 சவரன் தங்க நகை உள்ளிட்டவைகளை வரதட்சனையாக கொடுத்தும், வரதட்சணை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தன் மகள் இயற்கையான முறையில் இறக்கவில்லை எனவும், அவரை சூசைராஜ் கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், சென்னை விமான நிலையத்தில் உள்ள மரியாவின் உடலைப் பெற்று, சேலம், ஸ்டீல் பிளான்ட் போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
உடலைப் பெற்ற பின், உரிய வழக்கை பதிவு செய்து, மரியாவின் உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், பின் அவரது உடலை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மரியாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் கணவன் சூசைராஜுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் சேலம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்