சென்னை தினம் ஆண்டு தோறும் சென்னையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இன்றும், நாளையும் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற உள்ள சென்னை தின கொண்டாட்டத்தில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளது.




அதேபோல, சென்னை தின சிறப்பு ஏற்பாடாக எலியட்ஸ் கடற்கரையில் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால், விழா நிகழ்ச்சிகளில் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க : அந்த மனசுதான் சார் கடவுள்! பசிக்காக திருட வந்தவருக்கு சாப்பாடு போட்ட நபர்! நெகிழ்ச்சி சம்பவம்!


சென்னை தின கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் இயற்கை உர விற்பனை கடைகளும் இடம்பெற உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இந்த சென்னை தின கொண்டாட்டத்தை நடத்த உள்ளது. பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதிக்காக முக்கிய இடங்களில் செல்பி பூத்கள் என்று செல்பி பிரியர்களுக்காக பிரத்யேக பூத்கள் அமைக்கப்பட்டிருப்பது செல்பி பிரியர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.




சென்னை 383வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக சென்னையின் பல இடங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற உள்ளது. நடப்பாண்டிற்கான சென்னை தினத்தை முன்னிட்டு பிரத்யேக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது. இந்த சென்னை தின கொண்டாட்டத்தில் பங்கேற்று சிறப்புிக்குமாறு சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


சென்னை தின கொண்டாட்டத்தின் சார்பில் இன்றும், நாளையும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் பெசன்ட் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   


மேலும் படிக்க : Madras Day 2022 : சென்னை தின கொண்டாட்டம்.! போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்! முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..!


மேலும் படிக்க : Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு: எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு?- முழு விவரம்