"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை"  வளர்ப்பிலேயே எனக் கூறுவார்கள். ஆனால் தற்பொழுது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் ஒரு குழந்தை நல்லவராகுவதோ அல்லது தீவிரவாக்குவதற்கோ சமூகத்தின் பங்கும் சரி பாதி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து அல்ல. குற்றவாளிகளாக இருந்து வரும் பலரின் வாழ்க்கை பின்னணியில் வறுமையும் ஒரு காரணமாக இருந்து விடுகிறது. சிறிய சிறிய திருட்டு சம்பவங்களில் வறுமைக்காக ஈடுபடும் குற்றவாளிகள் ஒரு கட்டத்தில், பெரிய குற்றங்களையும் செய்ய துவங்கி விடுகின்றனர்.



முதல் குற்றத்தை செய்யவிடாமல் தடுத்தாலே பல குற்றவாளிகள் பெரிய குற்றத்தை செய்யாமல் இருந்து விடுவார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து இருந்து வருகிறது. வேலூரை சேர்ந்த நபர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்ததால் பிழைப்பை தேடி மறைமலைநகர் வந்துள்ளார். அங்கு அவர் சிறிய திருட்டு சம்பவத்தில், ஈடுபட்ட பொழுது அவருக்கு தண்டனை வழங்காமல், அவரை திருத்தும் முயற்சியாக அவருக்கு உணவு வழங்கிய உரிமையாளரின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில்  சேகர் என்பவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். அவரது கடைக்கு வெளியே பழைய இரும்பு பொருட்களை வைத்துள்ளார். அதனை நோட்டமிட்ட மது போதை ஆசாமி ஒருவர் அதனை திருடி சென்றுள்ளார். இதனைக் கண்ட அந்த கடையில் பணி புரியும் செக்யூரிட்டி அவரை பின்தொடர்ந்து அவரிடம் இருந்து அந்த இரும்பு பொருட்களை மீட்டு அவரை அழைத்துக் கொண்டு அவர் திருடிச்சென்ற இரும்பு கம்பிகளுடன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். மேலும் இது தொடர்பாக அந்த ஊழியர் அவரது முதலாளியிடம் இந்த திருட்டு சம்பவத்தை பற்றி கூறினார்.

 



 

பின்பு  அந்த மது போதை ஆசாமி தான் வேலூரை சேர்ந்தவன் என்றும் பிழைப்பதற்காக மறைமலைநகர்  வந்ததாகவும், குப்பைகள் அள்ளும் தொழில் செய்வதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த முதலாளி உடனடியாக அந்த திருடிய நபருக்கு இதுபோல் திருடக்கூடாது என அறிவுரை கூறி பசியை போக்க திருடிய, அந்த முதியவருக்கு உணவினை வழங்கினார். அதுமட்டுமின்றி எப்பொழுது உணவு வேண்டுமென்றாலும் இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், திருட்டு சம்பவத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கினார்.திருட சென்ற நபர் மீது கோபம் கொள்ளாமல் அவருக்கு அறிவுரை வழங்கியதோடு அவருக்கு உணவளித்த சம்பவம் பெறும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.