பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் நடைபயணம் அனுமதி தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் - யை பாமக வழக்கறிஞர் பாலு சந்தித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு ;
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார். மிக எழுச்சியாக, சிறப்பாக அந்த பயணம் தொடங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளும் பரப்புரையில் பேசப்பட்டது. இந்த பரப்புரை தமிழக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பயணத்திற்கு தடை என்ற தகவல் கிடைக்கப் பெற்றது. இதை அறிந்து பா.ம.க.,வினர் வருத்தத்தையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
சுற்றுப்பயணம் தடை இல்லை
அதன் பிறகு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு , தடை விதிக்கப்பட்டது என செய்தி வெளியானது. அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி, தொடர்புடைய காவல் மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் பேசிய பின் தெளிவுபடுத்தினார்கள். இது தடை விதிப்பதற்கான சுற்றறிக்கை அல்ல என தெரிவித்தார்கள்.
இந்த சுற்றுப் பயணத்திற்கு காவல்துறை தடை என்பது தவறான செய்தி. தொடர்புடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய உத்தரவை பிறப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி நடைபயணம் நடைபெறும். எந்த அசம்பாவிதமும் இல்லாமல் சுற்றுப்பயணம் நடைபெறும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இது பொது குழுவால் தேர்வு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதைத் தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பொதுக் குழுவிற்கு தான் உட்ச பட்ச அதிகாரம்
பாமகவிற்கு கட்சியின் கொள்கை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவொரு ஜனநாயக அமைப்பு. நிறுவனராக இருந்தாலும் கூட , எந்த தனிநபரும் ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் செயற்குழு, பொதுகுழு , உயர்மட்ட குழு எடுக்கும் முடிவு தான் பா.ம.க.,வின் முடிவு. பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது அதன் அடிப்படையில் அன்புமணி தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
கடந்து செல்லக் கூடிய பிரச்சனை தான்
இது தொடர்பாக நாங்கள் சிறிதளவும் பயப்படவில்லை. இது ஒரு சத்திய சோதனை. இதை அன்புமணி ராமதாஸ் தெளிந்த பார்வையோடு உறுதியான மனநிலையோடு எதிர் கொண்டு வருகிறார். பாமக வலுவான நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தும். கட்சியின் அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் அன்புமணி ராமதாஸ்க்கு அரணாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனை முடிந்து விட்டால் மகிழ்ச்சி என்று தான் நாங்களும் நினைக்கிறோம். இது கடந்து செல்லக் கூடிய பிரச்சினையாக தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.