தன்னுடைய நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகிய நடிகை கௌதமி. செய்தியாளர் வந்ததை அறிந்து உடனடியாக நடிகை வெளியேறியதால் எப்.ஐ.ஆர். நகல் பெற்று செல்ல மறந்த நடிகை.
கோட்டையூரில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவரான அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாகவும், 2004 ஆம் ஆண்டு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவெடுத்து அழகப்பன் உதவியை நாடியதாகவும், ஆனால் தன்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கடந்த அக்.23ஆம் தேதி பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த கௌதமி, தான் 25 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தும் தேர்தல் நேரத்தில் கட்சியால் கைவிடப்பட்டதாகவும், பாஜகவின் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு துணையாக இருப்பதாகவும், கட்சியில் இருந்து எந்த ஆதரவும் தனக்கு கிடைக்காததாகவும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார். கௌதமியின் இந்த முடிவு சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கௌதமி புகார் அளித்த அழகப்பன் பாஜகவில் இல்லை என்றும், தான் கௌதமி பக்கம் ஆதரவாக இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக கடந்த மாதத்தில் இருந்து பரபரப்பு உண்டாகி இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக அவரது மேலாளர் அழகப்பன் , அவரது மனைவி நாச்சால் உள்ளிட்ட ஆறு பேர் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று எஃப் ஐ ஆர் நகல் பெற தனது வழக்கறிஞர் மற்றும் சகோதரியுடன் நடிகை கௌதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.இதை அறிந்து செய்தியாளர்கள் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்றதை அறிந்து உடனடியாக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.