காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6-ஆம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9-ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை எட்டு ஒன்றியங்கள் உள்ளன . காட்டாங்குளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அச்சரபாக்கம் ,சித்தாமூர் , மதுராந்தகம், சென்ட் தாமஸ் மவுண்ட். அவற்றில் இதுவரை ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2448 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து வார்டு பதிவுகளுக்கு இரண்டு நபர்களும்,  ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 25 நபர்களும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 345 நபர்களும், ஊரக வார்டு உறுப்பினர் பதவிக்கு 2076 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

 

மேல்மருவத்தூர்

 

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.

 

இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது. இக்கோவிலை சுற்றி வட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம்.   அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோவிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2  முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரை தவிர மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு

 

பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவருடைய சார்ந்தோர் பெயரில் 3,33,277,214 அசையும் மற்றும் அசையா இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள செந்தில் 507,226,265. அதேபோல் அவர்களுடைய சார்ந்தோர் சொத்து மதிப்பு 665,142,304.