சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம்.  அதேபோல, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்தும் தென்தமிழகம், ஆந்திரம் போன்ற பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகள் செல்வது வழக்கம்.


இந்த நிலையில், தனியார் பேருந்து ஒன்று மதுரை செல்வதற்காக எழும்பூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தின் கூரையில் பயணிகளின் உடைமைகள் மற்றும் சரக்குகளை கட்டுவதற்கான கயிறை நன்றாக கட்டாத காரணத்தால் அது பேருந்தில் இருந்து விலகி, பேருந்தின் வேகத்தினால் காற்றில் ஆடியபடியே வந்துள்ளது.




சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் அருகே வந்தபோது, அந்த கயிறு பேருந்தின் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சிக்கியது. இதனால், அந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்னாலே தர, தர வென்று இழுத்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த கயிறு மற்றொரு இருசக்கர வாகனத்தில் சிக்கியது. அந்த மோட்டார் சைக்கிளும் கயிற்றில் சிக்கியதால் சாலையிலே தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டது. ஆனால், இதை எல்லாம் கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.


அப்போது, மூன்றாவதாக பேருந்தின் அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜோதிராமலிங்கம் என்பவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தில் பேருந்தின் கயிறு சிக்கியது. இந்த இருசக்கரவாகனமும் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால், வாகனத்தை ஓட்டிச்சென்ற ஜோதிராமலிங்கம் படுகாயம் அடைந்தார்.




பின்னர், ஈ.வி.கே.எஸ். சம்பத் சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் அமைத்திருந்த இரும்பு தடுப்பில் அந்த கயிறு சிக்கியது. இதனால், போலீசார் அமைத்திருந்த பேரிகாட் எனப்படும் அந்த இரும்பு தடுப்பும் கயிற்றில் சிக்கியவாறே பேருந்துடனே இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அந்த தடுப்புடன் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ஆதிசேஷனும் கயிற்றில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, அந்த கயிறு அறுந்ததால் இரும்பு தடுப்புடன், ஆதிசேஷன் தப்பினார். அப்போதுதான் இதை கவனித்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.


உடனடியாக, கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் ( வயது 42) என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பேருந்தையும் பறிமுதல் செய்தனர். பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவால் இருந்ததால், அந்த கயிறு சிக்கி அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் போக்குவரத்து போலீசார் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஜோதிராமலிங்கம் என்பவர் படுகாயமடைந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.