தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று விட்டுவிட்டு பெய்துவந்த மழை நேற்று நள்ளிரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்தது. காலையிலும் மழையின் தாக்கம் ஓரளவு நீடித்தது.


சென்னை, தலைமை செயலக வளாகத்தில் பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் உள்ளது. இந்த மரங்கள் எல்லாம் நீண்ட காலமாக தலைமை செயலகத்தில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த மழையால் சென்னை, தலைமை செயலக அலுவலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு திடீரென இன்று காலை 9 மணியளவில் சாய்ந்தது.




சற்றும் எதிர்பாராத தருணத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில், மரத்தின் கீழே இருந்த பெண் காவலர் ஒருவர் பரிதாபமாக மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார். மேலும், அங்கிருந்த போக்குவரத்து காவலர் உள்பட பலரும் காயமடைந்தனர். தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு. டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும், வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றும் பணிகளிலும் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயல் அலுவலகத்தின் வளாகத்திலே பெண் காவலர் மரம் சாய்ந்து உயிரிழந்த சம்பவம் சக காவல்துறையினர் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




உயிரிழந்த பெண் காவலர் முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா ஆவார். இந்த நிலையில், உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,


“ இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதலைமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமைவாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கே காவல் பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமை காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன்.


பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். மேற்கண்ட சம்பவத்தில்  உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.”


இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண