வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்க்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் தொடர் மழையால் அனைத்து சுரங்கபாதைகளிலும் மழைநீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வசிக்கும் வீடுகள், தெருக்கள்ம் முக்கிய சாலைகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக வடசென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகர், ஜவஹர் நகர், ஜி கே எம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் தொடர் மழை விடிய விடிய பெய்த தன் காரணமாக கொளத்தூர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜவஹர் நகர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட தெருக்களில் இடுப்பைத் தொடும் அளவு வெள்ள நீரானது புகுந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு மட்டுமல்லாமல், அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக ஜி கே எம் காலணியில் இன்னும் மழை நீர் அளவு அதிகரித்து காணப்படுவதாகவும்,அப்பகுதிக்குள் நுழைய முடியாத அளவு, முற்றிலுமாக மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இரு சக்கர வாகனங்களில் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் நடந்து மட்டுமே செல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளதால், முதல் தளம் இருக்கும் வீடுகளில் மட்டுமே பொதுமக்கள் சென்று வசித்து வருகின்றனர். மற்ற வீடுகளில் உள்ள குடியிருப்புவாசிகள் மழை வெள்ளம் இல்லாத உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கிருஷ்ணா நகர் ,திருவிக நகர், ஆகிய பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.இதனால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமப் அவதியுற்றதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.