தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டிவருகிறது.


இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கிடையே, விடிய விடிய பெய்துகொண்டிருக்கும் மழையால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வருபவர்கள் தங்களது பயணத்தை 2, 3 நாள்கள் ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.




சூழல் இப்படி இருக்க தொடர் மழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பிவந்தன. தொடர்ந்து, அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என இன்று காலை அறிவிக்கப்பட்டது.


அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 1.30 மணி அளவில் 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.




இந்நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், செம்பரம்பாக்கம் இரண்டாவது மதகில் 500 கன அடி நீர் இன்று பிற்பகல் திறந்துவிடப்பட்ட சூழலில் தற்போது 4ஆவது மதகில் இருந்து 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மொத்தம் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல் புழல் ஏரியில் 1500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்த சுழலில் தற்போது 2000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.


முன்னதாக, இன்று காலை நிலவரப்படி மட்டும் வில்லிவாக்கத்தில் 162 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீட்டரும், புழலில் 111 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண