மாமல்லபுரத்தில் நான்காவது நாளாக நடைபெறும் பட்டம் விடும் திருவிழா இறுதி நாளான இன்று 20,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

 

மாமல்லபுரம்  சர்வதேச பட்டம் விடும் திருவிழா ( mamallapuram kite festival 2023 ) 

 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்து 12ம் தேதி அன்று  துவங்கிய இந்த திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 20,000 சுற்றுலா பயணிகள் காத்தாடி திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.


 

நான்காவது நாளான இன்று மதியம் 4 மணி வரை 10,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஆன்லைனில் 150-ரூபாய்க்கும், நேரடியாக 200-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 40,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். இதில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டுசுமார் 200 வகையான பட்டங்களை விட்டு வருகின்றனர்.



 

மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்து வண்ண வண்ண காத்தாடிகளை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான பார்வையாளர்கள் வந்திருப்பதால் அடுத்த ஆண்டு இதைவிட பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 



 

தொடர்ந்து கவனம் பெரும் மகாபலிபுரம்

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில், அமைந்துள்ள மகாபலிபுரம் பல்லவர்கால சிற்பத்திற்கு புகழ் பெற்றதாக விளங்கி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைப் பெற்ற இடமாக மகாபலிபுரம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் மகாபலிபுரத்திற்கு சீன அதிபர் வந்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு, சர்வதேச நிகழ்வுகள் மூலம் கவனத்தை பெற்று வருகிறது. 

 



 

செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச அலைச்சறுக்கு விளையாட்டு போட்டி, ஆகியவை நடைபெற்று தொடர்ந்து, மகாபலிபுரம் கவனம் பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக மகாபலிபுரம் அமைந்திருக்கும் இடம் சென்னையில் இருந்து, சற்று தொலைவாகவும், ஆனால் எளிதில் சென்று வரக்கூடிய இடமாகவும் இருப்பதால், மகாபலிபுரம் தொடர்ந்து பல்வேறு வகையில் வளர்ந்து வருகிறது.