கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தார் என்ற வழக்கு செந்தில்பாலாஜியின் கழுத்தை சுற்றிய பாம்பாய் நின்று அவரை கொத்த முயற்சித்து வரும் நிலையில், அந்த  வழக்கை விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.



காவல்துறை அதிகாரி நாகஜோதி


சந்தேகங்களை எழுப்பும் டிரான்ஸ்பர்


இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டெம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த துணை ஆணையர் நாகஜோதி திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


நாகஜோதி மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பியாக மாற்றப்பட்டு, செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு – I துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். நாகஜோதியோடு சேர்த்து மொத்தம் 7 பேரை பணியிட மாற்றம் செய்து நேற்று இரவு உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் இன்று காலை 7 மணிக்கு பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


நாகஜோதியை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன ?


செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை நீர்த்துப்போக செய்யவே புதிய விசாரணை அதிகாரியாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. செப்டெம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், அதற்கான காலக்கெடு மிகக்குறைவாக இருக்கும் நிலையில், இப்போது ஏன் நாகஜோதியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்துள்ளது.


விசாரணையை தீவிரப்படுத்தும் அமலாக்கத்துறை


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு செந்தில்பாலாஜி சிறையில் இருந்தாலும் இன்னும் அவர் இலாக்கா இல்லாத அமைச்சராகவே தொடர்கிறார். அதனால், அவருக்கு சிறையில் வசதிகளுடன் கூடிய ஏ வகுப்பு சிறை வழங்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் பலரும் சிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அவரை அமைச்சராகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கிறார் என்று சமீபத்தில் ராமேஸ்வரம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதனாலேயே உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களையும் இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை விசாரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி அவரை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தது.


விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழு ?


இந்நிலையில், செந்தில்பாலாஜி வழக்கை விசாரித்து வந்த துணை ஆணையர் நாகஜோதி மாற்றப்பட்டுள்ளது விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியாக, திசைமாற்றும் சூழ்ச்சியாக பார்க்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இன்னும் அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதால் தமிழ்நாடு அரசு வசம் இருக்கும் காவல்துறை இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காது என்பதால், சிறப்பு விசாரணை குழு அமைத்து இந்த வழக்கை விசாரித்து, விரைவில் முடிக்க வேண்டும் என புகார்தாரர்கள் உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.