Kilambakkam New Bus Stand: சென்னையில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 


போக்குவரத்து வசதி


தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. உள்ளூர், வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 2 லட்சம் பயணிகளை வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு 2,000 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரமும் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். 


இதனிடையே பொங்கல், தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்தால் கோயம்பேடு மக்கள் கூட்டத்தால் திணறும். இதனால்  அரசு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும் பட்சத்தில் கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்கள் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையமாக செயல்பட்டு ஒவ்வொரு மண்டலங்களுக்கு ஏற்ப பேருந்துகள் புறப்பட்டு செல்ல வழி வகை செய்யப்படும். 


ஜூன் மாதம் திறப்பு


அதேசமயம் இப்படியான நாட்களில் வழக்கத்தை விட சென்னை போக்குவரத்து நெரிசலால் திணறும். இதனை குறைக்கும் பொருட்டு, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே இடத்தில் அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. 


ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இது பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ”கிளாம்பாக்கத்தின் புதிய பேருந்து நிலையத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. தற்போது வரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.


வசதிகள்


"இந்த பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. தனி அலுவலக கட்டிடம், பாதுக்காக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாநகர பேருந்துகளுக்கான பணிமனை போன்ற வசதிகள் உள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.


மேலும், ”2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது.  பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு 2 எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க


TN Ministers: தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றமா.? முக்கிய அமைச்சர்களுக்கு கல்தாவா? இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பா..?