திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ள காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு அப்பகுதியில் கைரேகைகள் கைப்பற்றியும், மோப்ப நாய் வர வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாய் சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. 


 




பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்:


இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் சிறுமியின் உறவினர்களை வரவைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஒருவர் மீது சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.


அதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான கணேசன் வயது (60) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து தலைமறைவான கணேசனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு பின்னர் தலைமறைவாக இருந்த கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


 




இரட்டை ஆயுள் தண்டனை:


மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி இந்து வழக்கு சம்பந்தமாக தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் வன்டுமை செய்து கொலை செய்த கணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் செலுத்த உத்தரவிட்டார். பின்னர் கணேசனை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் இருந்து ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்