கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) நடைபெற உள்ளதால் நாளை (27.01.2024) நாளை மறுநாள் (28.01.2024) ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 31-ம் தேதி முடிவடையும் இப்போட்டிகள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சைக்கிளிங் போட்டிகள் சென்னையிலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. இதையடுத்து, நாளையும் (27,01,2024- சனிக்கிழமை) நாளை மறுநாளும் (28,01.2024- ஞாயிறு) இ.சி.ஆர். பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடமான கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்த்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு நாட்களில் பொதுமக்கள் பயணத்தை மேற்கொள்ள பூஞ்சேரி, திருப்போரூர்,கேளம்பாக்கம் (OMR) வழியை பயன்படுத்தி கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி:


ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது


கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.