கலைஞர் கருணாநிதி என்றாலே கிங்தான்...மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்..!

"2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிவிட்டு 2023 வரை 2ஆவது செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை மத்திய அரசு. மக்களை ஏமாற்ற திட்டங்கள் தீட்டுவோரை மக்கள் நன்கு அறிவார்கள்"

Continues below advertisement

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

Continues below advertisement

"கருணாநிதி என்றாலே கிங்தான்"

பின்னர், திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், " இந்த வளாகத்திற்கு கிங் இன்ஸ்டிடியூட் என்ற பெயர் உள்ளது. கலைஞர் கருணாநிதி என்றாலே கிங்தான். கிண்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் தான் பொருத்தம். கலைஞர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருந்தார்.

ஒரு மனிதனின் வாழ்க்கை மரணத்துக்கு பிறகு கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என கூறியவர் கலைஞர். பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையை பிரமாண்டமாக கட்டி இருக்கிறோம். மறுபடியும்  சொல்கிறேன்.. பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையை கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனை.

"இரண்டாவது செங்கலை கூட எடுத்துவைக்கவில்லை"

2015ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு 2023ஆம் ஆண்டு வரை இரண்டாவது செங்கலை கூட எடுத்துவைக்காத அலட்சியத்தோடு இருக்கிறார்கள். ஒரு செங்கல்லின் கதை உங்களுக்கு தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை அப்படி இருக்க, அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் நாம் இந்த மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி சாதித்திருக்கிறோம்.

மக்களுக்காக உண்மையான நோக்கத்தோடு திட்டங்களை தீட்டுபவர்களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை மக்கள் நன்கு அறிவார்கள். 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, திமுக அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. ஜூன் 3ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, திமுக அரசு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

அதில் முக்கியமானது தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்பதாகும். மருத்துவமனைக்கான 4.89 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவ வளாகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. 500 படுக்கைகள் என்ற எண்ணிக்கையை பிறகு 1000 என உயர்த்தினோம்.

2022 மார்ச் 21 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இது 2023 ஜூன் மாதம். மொத்தம் 15 மாதத்திற்குள் இந்த மாபெரும் மருத்துவமனை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், 10 லிஃப்ட்டுகள், உணவகங்கள் என நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பை ஏற்று,  ஜூன் மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து,  கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பார் என்று தகவல் வெளியானது. எனினும் குடியரசுத் தலைவர் முர்மு, செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதால், பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி தள்ளி போனது. இச்சூழலில், முதலமைச்சர் ஸ்டாலினே மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

Continues below advertisement