பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்வது கண்டித்து, பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் காரணம் என்ன ஜெயந்தி ஆசிரியை அந்தப் பள்ளிக்கு செய்தது என்பது குறித்து பார்க்கலாம்.

 

இடையார்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

 

காஞ்சிபுரம் (Kanchipuram News) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இடையார்பாக்கம் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 150 மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் உட்பட இருந்து வந்து மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

 

பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல்

 

இந்நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த தலைமையாசிரியர் ஜெயந்தி இந்த கல்வியாண்டு இடமாற்றம் செய்யப்பட்டது அறிந்து அதனை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் மாணவர்களுடன் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று  தமிழ்நாடு  முழுவதும் தொடக்கப் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் தொடங்கப்பட்ட நிலையில்,  தலைமை ஆசிரியர் பணிக்கு வராததால், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் தொடர்பாக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் சங்கர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பள்ளியை புறக்கணித்து உள்ளனர். 

 

" வேறு பள்ளிக்கு, மாற்றக்கூடாது "

 

இதுகுறித்து அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சரியான கல்வி மற்றும் அவர்களின் தேவையான அடிப்படை வசதிகளை தலைமை ஆசிரியை ஜெயந்தி முறையாக செய்து வந்தார். அவரை இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு, மாற்றக்கூடாது என்பதை எங்களுடைய விருப்பமாக உள்ளது. எனவே தான் நாங்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

 

பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் இந்த சூழலில், தலைமை ஆசிரியை வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யக்கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு பழைய தலைமை ஆசிரியையே வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.