காஞ்சிபுரம்  ( Kanchipuram news ) : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மறைந்த ஸ்ரீதரை போலீசார் தேடி வந்த காலக்கட்டத்தில், அவர் தனது குழுவில் உள்ள வேறு யார் மீதாவது கைவைத்தால் அடுத்த 15 நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என அப்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

 

இந்நிலையில், மறைந்த ஸ்ரீதர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்களான இருவர், சமூக வலைதளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் காவல் நிலையங்களை கொண்டு வைத்து தகர்க்கும் அறிவிப்பினை தங்களுடைய முகநூல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் சமூக வலைதளங்களில் ரவுடி ஸ்ரீதர் குறித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட உழகோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 29), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் வெளியிட உதவிய கிதிரிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (வயது 20) ஆகிய பாமக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு இரு இளைஞர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

கோவில் நகரம் , கொலை நகரமான கதை


 

காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். ஆரம்பத்தில் ரவுடியாக இருந்து வந்த ஸ்ரீதர் தனபாலன், படிப்படியாக வளர்ந்து காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வந்தார். காஞ்சிபுரம் மாநகரில் ஸ்ரீதர் வைப்பதே சட்டமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் தான் காவல்துறையினர், ஸ்ரீதரை கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பொழுது வெளிநாடு தப்பிச் சென்றார். காவல்துறையினர் தன்னை நெருங்கியதை அறிந்து கொண்ட ஸ்ரீதர் , கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து  கொண்டார்.


 


 

இவரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்தனர். இதனை அடுத்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து,  கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.