காஞ்சிபுரத்தை சேர்ந்த சுமைதுாக்கும் தொழிலாளர் செல்வராஜ். இவரது தங்கை மகன், கல் ஒன்றை ஆனியால் செதுக்கி கொண்டு இருந்தார். அவரிடம் என்ன செய்கிறாய் என கேட்டார். அப்போது அந்த சிறுவன் கோயில் குளத்தில், கல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அந்த கல்லில் சிவலிங்கம் செய்கிறேன் என  தெரிவித்தார். பின் அந்த கல்லை அவரது வீட்டு தண்ணீர் தொட்டியில் போட்டப்போது அது மூழ்காமல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள்  தண்ணீரில் மிதக்கும் கல்லை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.



ராமாயணத்தில் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது என கேள்விப்பட்டுள்ளேன். இந்த கல்லும் அதுபோன்ற அதிசய கல்லாக இருக்கும் என்பதால், காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார். 

 

தண்ணீரில் மிதக்கும் கல் குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது, இது பவளப்பாறை வகையை சார்ந்தது. இதன் எடை ஒன்றரை கிலோ இருக்கும். இவ்வகை பாறைகள் கடலில் மட்டுமே காணப்படும்.  மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.  அரிதாக காணப்படும் இவ்வகை பவளப்பாறைகளை ராமேஸ்வரத்திலிருந்து புனித யாத்திரை சென்றவர்கள் யாராவது இங்கு கொண்டு வந்து காஞ்சிபுரத்தில் குளத்தில் போட்டு இருக்கலாம் என அவர் கூறினார். கல் தண்ணீரில் மிதப்பது குறித்த செய்தி வெளியாகியதிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியத்தில் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர் என தெரிவித்தார்.

 

பவளப் பாறைகள் என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி பூமத்தியரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளும், பசிபிக் பெருங்கடலும் ஆகும். இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.

 

பைப் கோரல் எனப்படும் ஒரு வகையான பவளப் பாறைகளில் உள்ள பைப் போன்ற துளைகளால், அவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது என்பது அறிவியல் ரீதியான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X