இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர ரூ 50 கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ரூ200 கோடி மோசடி வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகரின் சென்னை கானாத்தூர் வீட்டில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் 16 சொகுசு கார்கள், லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுக இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டது, அதிமுக பிளவுபட்டதின் எதிரொலியாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இரு பிரிவினருக்கிடையே அதிமுகவின் சின்னத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்தசுகேஷ் சந்திரசேகரிடம் டிடிவி தினகரன்  அணியினர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

 



மேலும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தினகரனோ, சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார்.மேலும், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜரானார் தினகரன். அவரிடம் 4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீசாரால் தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தினகரன் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் சந்திரசேகர் மீது மத்திய பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு  அமலாக்கத்துறை ஆகியவற்றில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 2013-ம் ஆண்டு போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த புகார் நிலுவையில் உள்ளது. 



திகார் சிறையிலிருக்கும் சுகேஷ்சந்திரசேகரின் பண்ணை வீடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, கானாத்தூரில் உள்ளது. இந்த வீட்டில் கடந்த ஐந்து நாட்களாக  அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 16 சொகுசு கார்கள், லேப்டாப்கள், 85 லட்சம் பணம், தங்க கட்டிகள்  உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பண்ணை வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சி களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். பல முக்கிய ஆவணங்கள் மூலம் சிறையில் இருந்து கொண்டும் சுகேஷ்  முறைகேடான வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X