முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  காந்தி கொலை வழக்கில் கடந்த 1991-ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார்.


தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 




இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் தீர்ப்பினை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் இன்று வழங்கினர். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த  பேரறிவாளன் விடுதலை விவகாரத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதன் காரணமாக ஜாமீனில் உள்ள அவரை தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக விடுதலை செய்து நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான போபண்ணா, கவாய் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. 



பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இரட்டை மண்டபம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் பேரறிவாளர் விடுதலையை வரவேற்று விசிக மாவட்ட துணைத் தலைவர் திருமாதாசன் தலைமையில் அக்கட்சியினர். பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டான்லி,காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஸ்டான்லி,நகர பொருளாளர் வினோத்,நகர தொண்டரணி செயலாளர் பாரதி என விசிக நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.