பேரறிவாளன் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பேரறிவாளவன் சிறையில் நிறைய பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார். சிறையில் அவருடைய அனைத்து நன்னடத்தைகளையும் கவனத்தில்கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னொரு விஷயம் ஒரு அமைச்சரவை எடுத்த முடிவை ஒரு ஆளுநர் இவ்வளவு காலதாமதப்படுத்தி இருக்கிறார்.
அப்படியானால் ஆளுநர் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறாரா என்ற கோணத்திலும் நீதிபதிகள் இதனை பார்த்துள்ளனர். ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில் இரண்டரை வருடத்திற்கு மேலாக ஆளுநர் இந்த முடிவை காலம் தாழ்த்தி வைத்ததால், 142 விதியின் கீழ் நாங்களே விடுதலை செய்கிறோம் என்று கூறி பேரறிவாளனை நீதிபதிகள் விடுதலை செய்தனர்.” என்று பேசியுள்ளார்.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவரது 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைக் கேட்டதும் அவரது வீட்டில் இருந்த பேரறிவாளனின் தாயாரும், சகோதரியும் கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீரால் அழுது தீர்த்தனர். பேரறிவாளனின் விடுதலை குறித்து பேசிய அவரது தந்தை, உச்ச நீதிமன்றத்தின் விடுதலை அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். வீட்டில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சமூகவலைதளங்களிலும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.