“மரணத்திலும் இணை பிரியா துணை வேண்டும்” என்ற பாடல் வரிகள் நிஜ வாழ்வில் நிகழும்போது சோகமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாகதான் இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அமைந்துள்ளது மானம்பதி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவருக்கு வயது 91. அவரது மனைவி சுலோச்சனா. அவருக்கு வயது 86.


ஆறுமுகமும், சுலோச்சனாவும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆறுமுகம் – சுலோச்சனா தம்பதியினர் தங்களது மகனின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்தின் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு உடல் போதியளவு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.




இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஆறுமுகம் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரை மனைவி சுலோச்சனா மற்றும் குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை சுலோச்சனா வழக்கம்போல காலையில் எழுந்து வீட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென மயக்கம் அடைந்து வீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் இதயத்துடிப்பு எதுவும் இல்லாமல் இருப்பதை அறிந்த பின்னர்தான் சுலோச்சனா உயிரிழந்தது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.


கணவர் ஆறுமுகம் கவலைக்கிடமாக இருந்த நிலையில், மனைவி சுலோச்சனா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆறுமுகத்திடம் உடனே தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதிச்சடங்கிற்கான வேலைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஆறுமுகத்திடம் அவரது மனைவி சுலோச்சனா உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.




இத்தனை காலம் உற்ற துணையாக உடனிருந்த மனைவி உயிரிழந்த விவகாரம் அறிந்த ஆறுமுகம் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றார். மனைவி உயிரிழந்த விவகாரத்தை அறிந்த ஆறுமுகம் சில நிமிடங்களிலே உயிரிழந்தார். வயதான தம்பதிகளான சுலோச்சனாவும், ஆறுமுகமும் அடுத்தடுத்து உயிரிழந்தது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மனைவியின் இறப்பை தாங்க முடியாத கணவன் மனைவி இறந்த சில நிமிடங்களிலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தம்பதிகள் இருவரது உடல்களும் மானாம்பதி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண