மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து சித்தா, ஆயுர்வேதப் படிப்புகளை ஆன்லைன் மூலம் கற்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இவற்றைச் சான்றிதழ் படிப்புகளாக வழங்கவும் அண்ணா பல்கலை. திட்டமிடப்பட்டு வருகிறது.
ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து சித்தா, ஆயுர்வேதப் படிப்புகளை ஆன்லைன் மூலம் கற்பிக்க முடிவு செய்துள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்கில், அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காகத் தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஆன்லைன் சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை தேசிய சித்த மருத்துவக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.
2 மாதங்களுக்குள் ஆன்லைன் படிப்பு அறிமுகம்
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, ''புரிந்துணர்வு ஒப்பந்தம் 15 நாட்களுக்குள் கையெழுத்தாக உள்ளது. அடுத்த சிண்டிகேட் குழு கூட்டத்தில், இதுகுறித்த உறுதி முடிவு எடுக்கப்படும். 2 மாதங்களுக்குள் ஆன்லைன் படிப்பு அறிமுகம் செய்யப்படும்.
ஏற்கெனவே இதற்கான பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. 40 முதல் 45 மணி நேரத்தில் படிப்பு முடியும் வகையில் உள்ளடக்கம் முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.
பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாடு
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறும்போது, ''சித்தா, ஆயுர்வேதா போன்ற நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம் ஆகிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவ முறை ஏற்கெனவே பிரபலமான ஒன்றாகும். அதைத் தற்போது உலகம் முழுக்கப் பரவலாக்க விரும்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துக்கான இந்த முன்மொழிவு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இ-வித்யா பாரதி மற்றும் இ- ஆரோக்ய பாரதி (e-VBAB) திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த முன்னெடுப்பு வலைதளங்கள் மூலம் ஆப்பிரிக்க மாணவர்களுக்கும், நல்ல தரமான கல்வியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி பாடங்களை அறிமுகம் செய்யவும் முடிவு
ஆன்லைன் சித்தா மற்றும் ஆயுர்வேத சான்றிதழ் படிப்புகளோடு, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, Cloud Computing, Energy Storage Technology ஆகிய படிப்புகளையும் ஆன்லைனில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகள் இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே 2021 அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் எம்பிஏ படிப்புகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்