காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியின் பொழுது இரும்பு பழுப்பு மேலே விழுந்து வட மாநில தொழிலாளி மேக் நாத் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா, பாலு செட்டி சத்திரம் பகுதியில், மேல் சிறுணை கிராமத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் வீடு கட்டும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் புதிதாக வீடு கட்டும் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் பகுதியைச் சார்ந்த போர்வெல் இயந்திர உரிமையாளர் செல்வராஜ் என்பவரிடம் வீட்டு உரிமையாளர் கோடீஸ்வரன் ஒப்படைத்துள்ளார்.
எதிர்பாராத விதமாக
நேற்று போர்வெல் இயந்திர உரிமையாளர் செல்வராஜ் தனது வேலையாட்கள் மற்றும் போர்வெல் இயந்திரத்துடன் வந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியில் போர்வெல் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்த பொழுதுஎதிர்பாராத விதமாக இயந்திரத்தில் இருந்து 20 அடி உயரம் கொண்ட இரும்பு பைப் கழண்டு பணி செய்து கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த வடமாநில தொழிலாளியான மேக்நாத் என்பவர் மீது விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.
கைது செய்து நடவடிக்கை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலு செட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளியான மேக்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பணியின் போது அஜாக்கிரதையாக இருந்த போர்வெல் இயந்திர உரிமையாளர் செல்வராஜ் ஓட்டுநர் மணி ஆகிய இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்