ஆரூத்ரா, IFS,GAT ஆகிய  நிதி நிறுவனங்களை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். தமிழகத்தில் ஏழை எளிய பொது மக்களிடமிருந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதா மாதம் அதிக வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பல கோடி ரூபாய்களை முதலீடாக பெற்று மோசடி செய்ததாக ஆரூத்ரா, IFS, GAT ஆகிய  நிதி நிறுவனங்களை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  சார்பில்,  காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே கண்டன ஆர்ப்பாட்டமானது , காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது.




 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், இது போன்ற போலி மோசடி நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பணத்தை மீட்டு கொடுத்திட வேண்டியும், மோசடி நிதி நிறுவனங்களை சேர்ந்த  முதலாளிகள், இயக்குனர்கள், முகவர்களை  உடனடியாக கைது செய்திட வேண்டியும், இவ் விவகாரத்தில் CB-CID விசாரணை மேற்கொள்ள வேண்டியும், போலி மோசடியால் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளை தமிழக அரசும்,காவல்துறையும் தடுத்திட வேண்டும்,போலி மோசடி நிதி நிறுவனங்கள் அனைத்தையும் தடை செய்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களும் எழுப்பப்பட்டது.

 



 

இதனை அடுத்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்திக்கையில், மக்களை ஏமாற்றும் பேர் வழிகள் திராவிட ஆட்சியில் நடமாடிக் கொண்டிருப்பது வேதனையை அளிக்கிறது, இதற்கு திராவிட ஆட்சியில் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அவர்கள் தான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதற்கட்டமாக எங்கள் கட்சி இது தொடர்பாக போராட்டத்தை துவங்கி உள்ளது. நிதி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் நிதி நிறுவனங்கள் ஆர்பிஐ இடம் அனுமதி பெற்று செயல்பட வேண்டும் என மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது, ஆனால் தமிழக அரசாங்கம் பல வருடங்களாக அதை கண்காணிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.



 

இந்த விவகாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பவில்லை மக்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும். இந்த மூன்று நிறுவனங்களும் ஒரு எடுத்துக்காட்டு தான் ஆனால் புற்று ஈசல் போல் பல நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் முளைத்துள்ளன, தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். திராவிட மாடல் அரசு என்ற கூறிக் கொள்ளும் திமுக தான் இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார் .



 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி. புருஷோத்தமன் தலைமை தாங்கினார், மேலும் எஸ். சுகுமார், இ.எஸ்.எஸ். ராமன், விடியல் சேகர் , நகர இளைஞரணி தலைவர் தென்னவன், உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த  நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொது மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.