திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன்.  வயது 59. விவசாயியான அவரது மனைவி அன்னக்கிளி. அவரது வயது 55. இவர்களுக்கு மணிகண்டன் வயது (30), சக்திவேல் வயது (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.


அதில், கடைசி மகனான சக்திவேல் என்பவருக்கு குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, விவாகரத்திற்கு பிறகு சக்திவேல் மனைவிக்கு மற்றொரு நபருடன் திருமணம் நடைப்பெற்றது. இதனால் மனவேதனை அடைந்த சக்திவேல், தனக்கு வேறு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை சகாதேவனுக்கும், சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


 




 


இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு சக்திவேல் தந்தை சகாதேவனிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது இன்னும் 2 ஆண்டுகள் கழியட்டும். அதன் பிறகு உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என சகாதேவன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டிலிருந்து கத்தியினை எடுத்து தந்தை என்றும் பாராமல் சகாதேவனை உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.


இதனால் சகாதேவன் துடிதுடித்து அதே இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் இது குறித்து தானிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்திவேல் மட்டுமின்றி உயிரிழந்த சகாதேவனின் மனைவி அன்னக்கிளி, சக்திவேல் சகோதரர் மணிகண்டன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


 




 


 


சகாதேவன் மனைவி அன்னைக்கிளி அளித்த வாக்குமூலம் :


  என்னுடைய கணவர் சகாதேவன் துடைப்பம் விற்பனை செய்து வந்தார். மேலும் திருப்பூர் மற்றும் கோவை போன்ற நகரங்களில் உள்ள துணி கம்பெனிகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அதில் மலை கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார். விவசாயத்திற்கான பயிர் செலவு மற்றும் குடும்ப செலவுக்காக 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளோம், பணம் கொடுத்தவர்கள் அதை திரும்ப கேட்டு தினமும் டார்ச்சர் செய்கின்றனர்.


இதனால் எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்கலாம் என முடிவு செய்து நான் எனது கணவர் சகாதேவன் மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் தானிப்பாடி கிராமத்தில் உள்ள ஒருவரிடம் நிலத்தை விற்பனை செய்ய போவதாக கூறி 7 லட்சம் ரூபாய் கொடுங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் நிலம் வாங்க வருவோர் 5 லட்சம் ரூபாய் மட்டுமே தர முடியும் என்றார். இது பற்றி எங்கள் குடும்பத்தினுடன் பேசிவிட்டு வருகிறேன் என்று வீட்டுக்குச் சென்று விட்டோம்.


 






 


அதனை தொடர்ந்து எனது மூத்த மகன் மணிகண்டன் அதிக வேலைக்கு போகும் நிலத்தை நீ வாங்கிய கடனுக்காக குறைந்த விலைக்கு விற்க சொல்கிறாயா? என எனது கணவரிடம் கேட்டான். அப்போது அங்கிருந்த சக்திவேல் எனக்கு 2 திருமணம் செய்து வைக்க சொல்லி கடந்த சில ஆண்டுகளாக உன்னிடம் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என தகராறில் ஈடுபட்டான். நானும் இப்படி கடன் வாங்கி விட்டு வேறு ஒரு பெண்ணிடம் அடிக்கடி சென்று வருவது நியாயம் தானா மகனுக்கு 2 திருமணம் செய்து வைக்க என எல்லாவற்றுக்கும் காரணம் நீதான். இனிமேல் நீ உயிரோடு இருந்தால் எதுவும் நடக்காது. அதனால் செத்து போதே மேல் என்று கூறியபடியே நாங்கள் 3 பேரும் சேர்ந்து சகாதேவனை கொல்கிறோம் என இவ்வாறு அன்னக்கிளி வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.