சென்னை விருகம்பாக்கம், சாரதாம்பாள் நகரில் வசித்து வருபவர் 29 வயதான செளந்தர்யா. இவர், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட 132-வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் செளந்தர்யாவின் அக்காள் மகன் ஒருவரும் வசிந்து வந்துள்ளார்.


இதற்கிடையில் செளந்தர்யாவுக்கு கணவரின் நண்பரான நெற்குன்றத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி 27 வயதான விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாக விஜய், செளந்தர்யாவுடன் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். 


நேற்று முன்தினம் இரவு செளந்தர்யாவின் வீட்டில் விஜய், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் கழுத்தில், கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


வீட்டில் செளந்தர்யாவின் மகன்கள் உள்பட 3 சிறுவர்கள் மட்டும் இருந்தனர். செளந்தர்யா இரவுவேலைக்கு சென்றுவிட்டது தெரிந்தது. சிறுவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, மர்மநபர்கள் யாரோ விஜயை குத்திக்கொன்றதாகவும், தாங்கள்தான் அவரை கொலை செய்தோம் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், துப்புரவு பணிக்கு சென்றிருந்த செளந்தர்யாவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், மற்றொரு காதலன் பிரபுவுடன் சேர்ந்து விஜய்யை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


இது குறித்து காவல்துறையினர் வெளியிட்ட தகவலில், “ காதலன் விஜய், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து செளந்தர்யாவுடன் தகராறு செய்து வந்ததுடன், அவரை அடித்தும் துன்புறுத்தி வந்தார். இதற்கிடையில் செளந்தர்யாவுக்கு தன்னுடன் பணிபுரியும் 36 வயதான பிரபு என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. விஜய் வீட்டில் இருக்கும் போதே இரவு நேரங்களில் பிரபுவையும் தனது வீட்டுக்கு செளந்தர்யா வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், பிரபு உடனான உறவை கைவிடுமாறு செளந்தர்யாவை கண்டித்தார்.


தொடர்ந்து பழக்கம் இருந்து வந்ததால் பிரபுவுக்கு விஜய் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி செளந்தர்யாவும், பிரபும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி போட்டனர். இதையடுத்து விஜயை தீர்த்துக்கட்ட செளந்தர்யா, பிரபு இருவரும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு செளந்தர்யா வீட்டுக்கு பிரபு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த விஜய், பிரபுவை கண்டதும் ஆத்திரத்தில் செளந்தர்யாவிடம் வாக்குவாதம் செய்தார்.


செளந்தர்யா வீட்டில் இருந்த தனது மகன்கள் உள்பட 3 சிறுவர்களையும் வெளியே சென்று விளையாடும்படி வெளியே அனுப்பினார். இதற்கிடையில் பிரபு, விஜய் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, விஜயை பிடித்து கீழே தள்ளினார். அப்போது செளந்தர்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து காதலன் விஜய் கழுத்தில் சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.


விஜய் கொலைசெய்யப்பட்ட பிறகு வீட்டுக்கு திரும்பி வந்த 3 சிறுவர்களிடமும், "உங்கள் நலனுக்காகத்தான் விஜயை கொன்றோம். இனிமேல் நீங்கள் இஷ்டம்போல் வெளியே சென்று விளையாடலாம். எனவே இந்த கொலையை நீங்கள் செய்ததாக பழியை ஏற்றுக்கொள்ளுங்கள். சிறுவர்கள் என்பதால் உங்களுக்கு பெரிய அளவில் தண்டனை ஏதும் இருக்காது" என்று பிரபுவும், செளந்தர்யாவும் வற்புறுத்தினர்.


இதன் பின்விளைவுகளை அறியாத சிறுவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஒன்றும் தெரியாதது போல் செளந்தர்யா, பிரபு இருவரும் ஜோடியாக துப்புரவு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் விஜய் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு சிறுவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்று சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிரபு, சவுந்தர்யா இருவரும் கொலை செய்ததை அறிந்து கைது செய்தனர்.