அட கணக்கு என்று பெயரை கேட்டாலும் அலறி ஓடும் குழந்தைகள். குழந்தைகள் மட்டுமா ஓடுவார்கள், பெரியவர்களுக்கு கூட அந்த பயம் இருக்கத்தான் செய்யும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாடம் கணக்கு தான். ஆனால் மாணவர்களுக்கு, கணித பாடம் என்றால் கசப்புதான். இதை மாற்ற, மாணவர்களுக்கு கணித பாடத்தை ஐஸ்கிரீமாக மாற்றி கொடுக்கிறார் , காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற கணித ஆசிரியர் யுவராணி 



ராமானுஜர் முதல் கோமாளி வரை..

 

மாணவர்கள் தினமும் பள்ளிக்கு போகும் ஆசைப்படும் பள்ளியாக ஸ்ரீபெரும்புதூர் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தெரிகிறது. அதற்கு காரணம் ஆசிரியை யுவராணி நாள்தோறும் புதுப்புது வேடமிட்டு, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லி 8,9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வித்தியாசமாய், உற்சாகமாய், குதுகலத்துடன் வகுப்பு எடுத்து வருகிறார் .கணித மேதை ராமானுஜர், மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி, அனைவரையும் மகிழ்விக்கும் கோமாளி போன்று நாள்தோறும் வேடமணிந்து பள்ளி மாணவர்களுக்கு பாடத்தை கற்பித்து வருகிறார் .





வாழ்வியலோடு கணிதம்..

 

இது குறித்து ஏபிபி நாடு சார்பில் ஆசிரியை யுவராணியிடம் பேசினோம், மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. மாணவர்களுக்கு கற்றுக் கொள்ள எப்பொழுதும் ஆர்வம் இருந்து கொண்டு தான் இருக்கும், ஆனால் கற்றுக் கொடுப்பது மாணவர்களுக்கு பிடித்ததை போல் தான் நாம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள், கற்றுக் கொள்வார்கள் என்கிறார்.



 

வகுப்பறையில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தால் அந்த வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் சுலபமாக பாடத்தை கற்றுக் கொள்வார்கள். அதனால் தான் கணக்கு பாடத்தை எளிதாக புரிய வைக்க தினசரி ஒரு வேடமிட்டு வருகிறேன். தினமும் நாம் வாழ்வியலோடு கணிதம் என்பது பின்னி பிணைந்து கொண்டிருக்கிறது. எனவே , கணிதத்தை தனது வாழ்வியலோடு எவ்வாறு பொருத்திக் கொள்வது, என்கிற முறையை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்குஎன்கிறார் ஆசிரியை யுவராணி. 

 



பெற்றோர்களுக்கும்..

 

நான் கற்பிக்கும் முறை மாணவர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களின்பெற்றோர்களுக்கும் பிடித்திருக்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னுடைய இந்த முயற்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம், மேலும் வேகமாக  செயல்பட வைக்கிறது. பல இடங்களிலிருந்து வரவேற்பை பெற்றாலும் , சில நேரங்களில் விமர்சனங்களும் வரத்தான் செய்கிறது. நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு, மாணவர்களின் வாழ்க்கை மேம்பட தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன் என கூறுகிறார் ஆசிரியை யுவராணி. அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த முயற்சி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.